

சென்னை: “தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுக்க நாம் ஒவ்வொருவரும் முதலடியை எடுத்து வைப்போம். மாற்றம் எப்போதும் நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுக்க நாம் ஒவ்வொருவரும் முதலடியை எடுத்து வைப்போம். தமிழ்நாட்டில் 16-வது சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள் ஏப்ரல் 23-ம் நாள் நடைபெறவிருக்கிறது.
நம்மை யார் ஆளக் கூடாது என்பதைவிட, யார் ஆட்சி செய்தால் நாடு வளம்பெற்று முன்னேறும் என்ற சிந்தனை கடந்த கால தேர்தல்களைவிட தற்போது மேலோங்கி இருப்பதை காணமுடிகிறது.
ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் சுதந்திர இந்தியாவில் தங்கள் ஊழல் பணத்தை ஒரு ரூபாயில் வாக்காளர்களுக்கு கொடுக்க துவங்கி, இந்த 16-வது தேர்தலில் 2 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை போட்டிபோட்டுக்கொண்டு கொடுத்து தங்களின் ஊழலை வாக்காளர்களிடமும் திணிக்கிறார்கள்.
கடந்த காலங்களில் ஆண்ட, ஆளும் கட்சிகள் தேர்தல் காலத்தில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் எத்தனை சதவீதம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேறாத வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற இயலவில்லை என்ன காரணமாக இருக்கும் என வாக்காளர்களை சிந்திக்க விடாததே இக்கட்சிகளின் தேர்தலின் சக்ஸஸ் பார்முலா.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அண்மையில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்புகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கே வழங்கச் சட்டம் இயற்றப்படும். அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் முறையான சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் அனைத்துச் சமூகத்தினருக்கும் அவரவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உள் இடஒதுக்கீடு வழங்கப்படும். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற விவசாய நிலங்களைப் பாதிக்கும் திட்டங்களுக்குத் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டு, மணல் கொள்ளையைத் தடுத்து இயற்கை வளங்களைப் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் படிப்படியாகக் கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக மாற்றத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கான நிதிப் பங்கீடு மற்றும் உரிமைகளைப் போராடிப் பெறுதல். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெற முன்னுரிமை. கச்சத்தீவை மீட்டெடுக்க அழுத்தம் கொடுப்பதோடு, எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கவும், உயிரிழக்கும் மீனவர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கவும் உறுதி அளிக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
நாளை மறுநாள் ஏப்ரல் 23-ம் நாள் நடைபெறும் தேர்தல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் கூட்டணிக்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு “கேமரா” சின்னத்தில் வாக்களித்து மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுக்க நாம் ஒவ்வொருவரும் முதலடியை எடுத்து வைப்போம். மாற்றம் எப்போதும் நம்மிடமிருந்துதான் தொடங்கவேண்டும் என்ற வாசகத்துக்கு ஏற்ப களம் காண்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.