

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே சகாதேவன்பேட்டையில் இன்று (நவ.21) காலை சிறுத்தை நடமாடியதாக வெளியான தகவலால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்த சகாதேவன்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ் (71). தமிழ்நாடு வனத்துறையில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர், சமையலறையில் இன்று (நவ.21) காலை 9.45 மணியளவில் நின்றிருந்தார். சமையலறை ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீட்டின் அருகே உள்ள சபாபதி என்பவருக்கு சொந்தமான காலி மனையில் உள்ள மாமரத்தின் அருகே சிறுத்தை நடந்து சென்றதை பார்த்ததாக வனத்துறைக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிவராஜ் கூறும்போது, “எனது வீட்டின் அருகே உள்ள காலி மனையில் இரண்டரை முதல் 3 அடி உயரத்திலும், 4 அடி அகலத்தில், சாம்பல் நிறத்தில், உடலில் பழைய ஒரு ரூபாய் நாணயம் அளவில் கருப்பு புள்ளிகளுடன் சிறுத்தை நடமாடியது. சமையலறையில் இருந்தபோது, அங்கிருந்த ஜன்னல் வழியாக காலை 9.45 மணிக்கு பார்த்தேன். முருகன் கோயில் தெரு வழியாக வந்த சிறுத்தை, திரவுபதி அம்மன் கோயில் தெரு வழியாக கடந்து சென்றது.
அப்போது நாய்கள் குரைத்தது. சிறுத்தை நடமாட்டம் குறித்து விவசாயப் பணியில் இருப்பவர்களுக்கு தெரிவித்து எச்சரிக்கை செய்துள்ளேன். இதற்கு முன்பு, எங்கள் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததில்லை” என்றார்.
இதற்கிடையில், விழுப்புரம் வனவர் குணசேகரன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர், சகாதேவன்பேட்டைக்கு விரைந்து சென்றனர்.
சகாதேவன்பேட்டை வழியாக செல்லும் ரயில் பாதையில் இருந்து முருகன் கோயில் தெரு, திரவுபதி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட வீதிகளில் ஆய்வு செய்தனர். விவசாய நிலங்கள், ஏரி மற்றும் வனத்துறைக்கு சொந்தமான சமூக நலக் காடுகளிலும் ஆய்வு செய்தனர். மேலும் கிராம மக்களிடம், சிறுத்தை நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தினர்.
வனவர் குணசேகரன் கூறும்போது, “சிறுத்தை நடமாடியதாக ஓய்வு பெற்ற வன ஊழியர் சிவராஜ் உறுதியாக கூறுகிறார். விக்கிரவாண்டி சுங்கவரிச் சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதி ஒரு சிறுத்தை உயிரிழந்ததால், அவர் கூறுவது புரளி என்று கடந்து செல்ல முடியாது.
3 வீதிகளில் ஆய்வு செய்துள்ளோம். சிறுத்தையின் கால் தடம் ஏதுமில்லை. இக்கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்களும் இல்லை.
ட்ரோன் மூலமாக ஆய்வு செய்ய உள்ளோம். கிராம மக்கள் மற்றும் விவசாய பணியில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்துள்ளோம்.
நிழலில் பார்த்ததால் சாம்பல் நிறமாக தெரிந்திருக்கலாம். அல்லது, பல இடங்களை கடந்து வந்துள்ளதால், அதன்மீது மண் படர்ந்திருக்கலாம். கழுதை புலியாக இருக்கலாம் என சந்தேகித்தோம். கழுதை புலிக்கு வால் சிறியதாக இருக்கும்.
நீளமான வால் இருந்ததாக சிவராஜ் கூறுகிறார். சிறுத்தைக்குதான் வால் நீளமாக இருக்கும். பகலிலும் சிறுத்தை நடமாட்டம் இருக்கும். கால்நடைகளை விட, நாய்களைதான் சிறுத்தைகள் தாக்கும். வேலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட வன பகுதியையொட்டி செஞ்சி வன பகுதியும் உள்ளது.
இதனால், சிறுத்தை இடம் பெயர்ந்திருக்கலாம். ஆற்றங்கரை பகுதி வழியாக சிறுத்தை நடமாடியிருக்கலாம். எங்களது ஆய்வு தொடரும்” என்றார்.
வனப் பகுதி வழியாக இயக்கப்படும் சரக்கு ரயிலில் சிறுத்தை பயணிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் கூறி வருகின்றனர். இதனால், சரக்கு ரயிலில் பயணித்த சிறுத்தை, விழுப்புரம் - புதுச்சேரி ரயில் பாதையையொட்டி உள்ள சகாதேவன்பேட்டைக்குள் நுழைந்திருக்காலம் என்ற கருத்தும் நிலவுகிறது.
விக்கிரவாண்டி சுங்கவரிச் சாவடி அருகே சிறுத்தை உயிரிழந்த நிலையில், சகாதேவன்பேட்டை கிராமத்தில் சிறுத்தை நடமாடியதாக வெளியான தகவலால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டியது வனத்துறையினரின் கடமையாகும். அவர்கள், தனது கடமையை செய்வார்களா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.