

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது 75-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி: ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துக்கள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது. பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ரஜினிகாந்த் வயதை வென்ற வசீகரம். மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை. ஆறிலிருந்து அறுபது வரைக்கும் அரை நூற்றாண்டாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என் நண்பர் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி, மநீம தலைவர் கமல், கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.