‘படையப்பா’ நீலாம்பரி உருவான கதை - ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள்

‘படையப்பா’ நீலாம்பரி உருவான கதை - ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள்
Updated on
2 min read

ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்து 1999-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘படையப்பா’. கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டும் ரஜினி சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் கொண்டாடும் விதமாகவும் இப்படம், டிச.12ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் அனுபவங்களை ரஜினிகாந்த் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “பொன்னியின் செல்வன் நாவலில் நந்தினி கதாபாத்திரம் எனக்கு பிடிக்கும். அதை வைத்து நான் உருவாக்கிய படம்தான் ‘படையப்பா’.

இந்த தலைப்பை சொன்னதும் நான்தான். கதையை ரவிகுமாரிடம் கொடுத்து திரைக்கதை எழுதச் சொன்னேன். நந்தினியை மையமாக வைத்து உருவாக்கிய நீலாம்பரி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க வேண்டுமென விரும்பினேன்.

பல மாத காத்திருப்புக்குப் பிறகு அவருக்கு விருப்பமில்லை எனத் தெரிந்ததும் ஸ்ரீதேவி, மீனா, மாதுரி தீக் ஷித் சரியாக இருப்பார்கள் என்று சொன்னார்கள். பிறகு ரம்யா கிருஷ்ணனை, ரவிகுமார் அறிமுகம் செய்தார். எனக்கு அரைமனதாகவே இருந்தது. அந்த நீலாம்பரி கதாபாத்திரம் ஹிட்டானால்தான் படமே ஹிட்டாகும். பின்னர் அவருக்கு லுக் டெஸ்ட் எடுத்தோம். எல்லாமே நன்றாக நடந்தது.

அடுத்து, சிவாஜி சாரை நடிக்க வைக்கலாம் என்றேன். அவரிடம் சென்று ஒப்புதல் வாங்கிய பிறகு, ஐந்து நாள் படப்பிடிப்புக்கே அவர் அதிகமாக சம்பளம் கேட்டதாக ரவிகுமார் கூறினார். அவர் ஓகே சொன்னதே போதும் என்று அடுத்த நாளே கேட்ட தொகையை கொடுத்தோம். பிறகு சவுந்தர்யா, லட்சுமி, மணிவண்ணன் எல்லோரும் வந்தார்கள்.

1996-ல் நான் ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசியதால் `படையப்பா' படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே படத்துக்கு எதிராக, ஜெயலலிதாவை வைத்துதான் நீலாம்பரி கேரக்டர் எடுக்கப்படுவதாகப் புரளி வந்தது. படம் ரிலீஸான பின்பு, ஜெயலலிதா படத்தைப் பார்க்க வேண்டும் எனக் கூறினார்.

சிலர் அவருக்குப் படம் காண்பிக்க வேண்டாம் எனக் கூறினர். ஆனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி ஏற்கெனவே படம் பார்த்து விட்டார். இதனால் ஜெயலலிதா பார்ப்பதில் என்ன இருக்கிறது? அவருக்குப் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. அவரும் படம் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாகக் கூறினார்.

இந்தப் படத்தின் 2-ம் பாகத்தையும் உருவாக்கலாம் என்ற பேச்சுகள் போய்க்கொண்டு இருக்கின்றன. ‘நீலாம்பரி’ என டைட்டில் வைத்து கதை விவாதம் போய்க்கொண்டு இருக்கின்றது.

‘படையப்பா’வில் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னைப் பழிவாங்காமல் விடமாட்டேன் என நீலாம்பரி கதாபாத்திரம் சொல்லிவிட்டு இறந்துவிடும். அதன் தொடர்ச்சியாக ‘நீலாம்பரி’ என்ற டைட்டிலுடன் `படையப்பா' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பேச்சு போய்க்கொண்டு இருக்கிறது.

இந்தப் படத்தை என் கலைப்பயணத்தில் 25 வது ஆண்டில் தயாரித்து வெளியிட்டேன். இதுவரை ஓடிடி- தளம் உள்பட யாருக்கும் கொடுக்கவில்லை. இதை தியேட்டரில் பார்ப்பதுதான் கொண்டாட்டம். எனது 50 வது வருட கலைப் பயணத்தில், என் பிறந்த நாளில் `படையப்பா' மீண்டும் வருகிறது. இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

‘படையப்பா’ நீலாம்பரி உருவான கதை - ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள்
Stranger Things 5 Vol 1: பரபரப்பை நோக்கி நகரும் இறுதிக்கட்டம் | ஓடிடி திரை அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in