வடலூரில் வள்ளலாரின் 204-வது அவதார தின விழா: ஆளுநர், முதல்வர் தலைவர்கள் புகழாரம்

வள்ளலாரின் அவதார தின விழாவையொட்டி, வடலூர் சத்திய ஞானசபையில் சன்மார்க்க கொடியேற்றப்பட்டது.

வள்ளலாரின் அவதார தின விழாவையொட்டி, வடலூர் சத்திய ஞானசபையில் சன்மார்க்க கொடியேற்றப்பட்டது.

Updated on: 
2 min read

கடலூர்/ சென்னை: வள்ளலார் அவதரித்த 204-வது ஆண்டையொட்டி, வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நேற்று அதிகாலை 5 மணிமுதல் சன்மார்க்க அன்பர்கள் ஒன்று கூடி அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடினர். இதனைத் தொடர்ந்து, காலை 7.30 மணியளவில் சத்திய தரும சாலையில் சன்மார்க்கக் கொடிப் பாடல் முழங்க, முறைப்படி சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.

இதையடுத்து பார்வதிபுரம் கிராம மக்கள் பழங்கள், பூ மாலைகள் உள்ளிட்ட மங்களகரமான சீர்வரிசைப் பொருட்களுடன் பார்வதிபுரத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக சத்திய ஞான சபைக்கு வந்தடைந்தனர். பின்னர், சத்திய ஞான சபையில் புதிதாக நிறுவப்பட்ட கொடி மரத்தில் பார்வதிபுரம் கிராம மக்கள் மற்றும் சன்மார்க்க பெரியோர்கள் முன்னிலையில் சன்மார்க்கக் கொடியேற்றி வைக்கப்பட்டது. கொடியேற்றத்துக்குப் பின் சத்திய தருமசாலையில் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திலும் 204-வது அவதார நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு, சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. விழா ஏற்பாடுகளை தெய்வ நிலைய அலுவலர்கள், பார்வதிபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர். வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்: உயிர் இரக்கம் உடையவர்கள் உள்ளமே கடவுள் வாழும் இடம். அதுவே வழிபாடும் ஆகும் என்று உலக சமுதாயத்துக்கு உணர்த்தி, ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உறுதியாக மொழிந்த வள்ளல் பெருமானின் வருவிக்க உற்ற திருநாளில் அவரின் திருவடிகளை போற்றி வணங்கி மகிழ்கிறோம்.

முதல்வர் விஜய்: அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம், ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி என்ற வள்ளலாரின் உயரிய கொள்கைகள், மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாக திகழ்கின்றன. அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலாரின் வழியில் தொடர்ந்து பயணிப்போம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: அனைத்து உயிர்களையும் ஒன்றாகக் கருதிய வள்ளலார் பிறந்தநாள். வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல அவர் வலியுறுத்திய சமூகநீதி, சமத்துவ மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளும் சுடர்விட்டு மக்கள் மனங்களில் எரிய வேண்டும். மதமென்னும் பேய் நம்மைப் பிடியாதிருக்க வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற கருணை நிறைந்த உள்ளத்துடன் அனைத்து உயிர்களிடத்தும் அன்பையும் இரக்கத்தையும் போதித்தவர் வள்ளலார். ஜீவகாருண்யம், பசிப்பிணி போக்குதல், சமரச சுத்த சன்மார்க்கம் ஆகிய அவரது உயரிய கொள்கைகள் மனிதகுலத்துக்கு என்றும் வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கின்றன.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: அன்பும் இரக்கமும் நிறைந்த வாழ்வே இறைவனை அடையும் வழி எனப் போதித்த தத்துவஞானியும், மனிதநேயத்தின் மகத்தான ஒளிவிளக்காக விளங்கிய மகான் வள்ளலார் வழங்கிய அருட்சிந்தனைகளைப் பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

<div class="paragraphs"><p>வள்ளலாரின் அவதார தின விழாவையொட்டி, வடலூர் சத்திய ஞானசபையில் சன்மார்க்க கொடியேற்றப்பட்டது.</p></div>
“என்னுடைய பதிவு ஆதங்கத்தின் வெளிப்பாடு; தவெகவில் இருந்து விலகவில்லை” - நாஞ்சில் சம்பத் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in