

சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது 68-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு ஆளுநர் அர்லேகர், முதல்வர் விஜய் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். எளிமை, பின்னடைவுகளை எதிர்கொள்ளும் மனஉறுதி. பொதுச் சேவையில் அயராத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் உந்தப்பட்ட அவரது ஊக்கமளிக்கும் பயணம், நாட்டுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும், தேசத்துக்கான அர்ப்பணிப்புமிக்க சேவையுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
முதல்வர் விஜய்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நல்ல உடல் நலத்துடன் நாட்டுக்கான அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: எளிய பின்னணியில் இருந்து இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்த திரவுபதி முர்முவின் வாழ்க்கைப் பயணம் இந்தியா முழுவதும் பல லட்சம் பேருக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகும். அவர் நீண்ட காலம் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் அவர் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட இறைவனை பிரார்த்திக்கிறேன். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் நலனுக்கான பணிகளை அவர் தொடரட்டும்.