

கோப்புப் படம்
சென்னை: கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, சிலுவையில் அறையப்பட்ட தியாக மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை நினைவுகூரும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து மனிதகுலத்துக்கு நம்பிக்கையின் ஒளியை ஏற்றி வைத்தார். இயேசுகிறிஸ்து இந்த உலகுக்கு அருளிய அன்பு, கருணை, தியாகம், சமத்துவம் மற்றும் சேவை என்ற மகத்தான கொள்கைகள் என்றும் நம் வாழ்வில் ஒளிவிளக்காய் திகழட்டும்.
பாமக தலைவர் அன்புமணி: உலகின் இன்றைய தேவை கருணை, சகிப்பு தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல். அதை வலியுறுத்தும் ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துகள்.
மதிமுக பொதுச்செயலாளர்கள் வைகோ: கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது. கூட்டாட்சி தத்துவம் வெற்றிபெறவும், மாநில சுயாட்சி மலரவும் இந்நாளில் சபதம் ஏற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோரும் ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.