சிபிஐ வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற ரூ.50 லட்சம் பெற்றதாக குற்றம்சாட்டிய வழக்கறிஞர் சங்கம் போலியானது

சிபிஐ வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற ரூ.50 லட்சம் பெற்றதாக குற்றம்சாட்டிய வழக்கறிஞர் சங்கம் போலியானது
Updated on
1 min read

சென்னை: சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்றுத்தருவதாகக்கூறி மூத்த வழக்கறிஞர் ரூ.50 லட்சம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய வழக்கறிஞர் சங்கமே போலியானது எனக்கூறி உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008-09 காலகட்டத்தில் தங்க வர்த்தகத்தில் ஈடுபட்ட என்எஸ்சி போஸ் சாலையைச் சேர்ந்த கணேஷ் அகர்வால் மற்றும் அவரது தந்தை நரேஷ் பிரசாத் அகர்வால் ஆகியோர் ரூ.89.90 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி கணேஷ் அகர்வாலும், வழக்கை ரத்து செய்யக்கோரி நரேஷ் பிரசாத் அகர்வாலும் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஒருவர் இந்த வழக்கில் சாதகமான உத்தரவைப் பெற்றுத்தருவதாகக்கூறி ரூ.50 லட்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி ‘ஆல் இந்தியா லாயர்ஸ் அசோசியேஷன் ஃபார்ஜஸ்டிஸ்’ என்ற வழக்கறிஞர் சங்கம் குற்றம் சாட்டி உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்கும் கடிதம் அனுப்பியிருந்தது.

அந்த கடிதம் எதிரொலியாக இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகி்ய நீதிபதி எம். நிர்மல்குமார் இது தொடர்பாக உயர் நீதிமன்ற ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டை பகிரங்கமாக மறுத்த சம்பந்தப்பட்ட மூத்த வழக்கறிஞரும் இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையி்ல் அந்த மூத்த வழக்கறிஞர் மீது குற்றம் சாட்டி கடிதம் அனுப்பிய வழக்கறிஞர் சங்கமே போலியானது எனக்கூறி நெல்லை பாளையங்கோட்டையை தலைமையிடமாகவும், வண்டலூரில் கிளையையும் கொண்டு இயங்கும் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்சங்கம் சார்பில், அதன் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் யு.அதியமான் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார்.

அதில், ‘‘மூத்த வழக்கறிஞர் ஒருவர் மீது குற்றம் சாட்டி உயர் நீிதிமன்ற பதிவுத்துறை மற்றும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், எங்களது அமைப்பின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எங்களது சங்கத்தின் சார்பில் இதுதொடர்பாக யார் மீதும் எந்த குற்றச்சாட்டும் சுமத்தி கடிதம் அனுப்பப்படவில்லை.

நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல பாரிமுனை முகவரியில் எங்களது அமைப்புக்கு எந்த அலுவலகமும் இல்லை. செயலாளர் என்ற பதவியும் எங்களிடம் இல்லை.

எனவே எங்களது சங்கத்தின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக அந்த போலி கடிதத்தை அனுப்பியவர்களையும், அதன் பின்னணியையும் கண்டறிந்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக காவல்துறையிலும் புகார் அளிக்கவுள்ளோம், என தெரிவித்துள்ளார்.

சிபிஐ வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற ரூ.50 லட்சம் பெற்றதாக குற்றம்சாட்டிய வழக்கறிஞர் சங்கம் போலியானது
சென்னை | திருமண மண்டபத்தில் உடை மாற்றிய பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த இளைஞர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in