போடிமெட்டு மலைச்சாலையில் பல இடங்களில் மண்சரிவு - இரவு பயணத்துக்கு கட்டுப்பாடு

போடிமெட்டு மலைச்சாலையில் பல இடங்களில் மண்சரிவு - இரவு பயணத்துக்கு கட்டுப்பாடு
Updated on: 
1 min read

தேனி: போடிமெட்டு மலைச்சாலையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களிலும் மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே இரவு நேர பயணத்தை தவிர்க்கும்படி தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் தமிழக கேரளத்தை இணைக்கும் முக்கிய வனச்சாலையாக போடிமெட்டு உள்ளது. மலையடிவாரமான முந்தலில் இருந்து 20 கி.மீ. தூர அளவுக்கு இச்சாலை அமைந்துள்ளது. 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் 18 அடி முதல் 30 அடி வரை அகலம் கொண்ட இச்சாலை சர்வதேச சுற்றுலாத்தலமான மூணாறுக்குச் செல்லும் முக்கியமான சாலையாகும்.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையினால் இந்த மலைச்சாலையின் வழிநெடுகிலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறை, மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று இரவு 8-வது கொண்டை ஊசி வளையில் திடீர் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் பேருந்து, சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. மூணாறில் இருந்து தேனி வந்த கேரள அரசுப் பேருந்துகள் பூப்பாறை, நெடுங்கண்டம், கம்பம்மெட்டு வழியாக மாற்றுப்பாதையில் தேனி சென்றன.

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் மண், பாறைகளை இரவோடு, இரவாக அகற்றினர். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் போக்குவரத்து சீரானது. இருப்பினும் தொடர் மழை காரணமாக மண்சரிவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், ‘தொடர் மழையினால் சாலைக்கு அருகில் உள்ள மேல்தள மலைப்பகுதி அதீத ஈரமான நிலையை அடைந்துள்ளது. இதனால் மண்ணின் பிடிப்புத்தன்மை குறைந்து நெகிழ்வு நிலைக்கு மாறி உள்ளது.

மேலும் பாறை இடுக்குகள், மண்திட்டுக்களை நீரோட்டம் ஊடுருவுவதால் தொடர்ந்து மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. டூவீலர்களில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசத்துடன் பயணிக்க வேண்டும்’ என்றனர்.

தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘மலைச்சாலைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்புகளை சரிசெய்வதற்கான வாகனங்கள், கருவிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மலைச்சாலையில் இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது’ என்றார்.

போடிமெட்டு மலைச்சாலையில் பல இடங்களில் மண்சரிவு - இரவு பயணத்துக்கு கட்டுப்பாடு
வானிலை முன்னெச்சரிக்கை: நெல்லை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in