

சென்னை: சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த எம்.வரதப்பன் நாயக்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "மதுரவாயல் தாலுகா ராமாபுரத்தில் எனக்கு சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது.
நான் உயிருடன் இருக்கும் நிலையில் நான் இறந்து விட்டதாகக்கூறி எனது வாரிசுகள் என போலியாக வாரிசு சான்றிதழ் பெற்று ஒரு கும்பல் எனது நிலத்தை தனியார் பல்கலைக்கழகத்துக்கு விற்பனை செய்துள்ளது. அந்தக் கும்பல் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எனக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக எந்தவொரு பத்திரப்பதிவும் மேற்கொள்ளக் கூடாது என சைதாப்பேட்டை சார்- பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முகமது ஷபீக் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.விஜயலட் சுமி, “ஏற்கெனவே போலியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி எஞ்சிய நிலங்களையும் பத்திரப்பதிவு செய்ய வாய்ப்புள்ளது" என்றார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பாக மனுதாரருக்கு முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தாமல் எந்தவொரு பத்திரப்பதிவும் மேற்கொள்ளக்கூடாது என சைதாப்பேட்டை சார்- பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் அக்.13-க்கு தள்ளிவைத்துள்ளார்.