மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ்; பறவை, விலங்கு கடித்த பழங்களை உண்ணக்கூடாது: சுகாதாரத்துறை

மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ்; பறவை, விலங்கு கடித்த பழங்களை உண்ணக்கூடாது: சுகாதாரத்துறை
Updated on
1 min read

சென்னை: மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பரவல் இருப்பதால் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்று தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிபா வைரஸ் விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய் தொற்று ஆகும். பழங்களை உண்ணும் வவ்வால்கள், குதிரைகள், நாய்கள் மற்றும் பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு இந்த தொற்று பரவுகிறது. வவ்வாலின் உமிழ்நீர் படர்ந்த பழங்களை உண்ணுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்து கொள்வதன் மூலமாகவோ நோய் தொற்று பரவுகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், தூக்கமின்மை, மூச்சுத்திணறல், மயக்கம், வலிப்பு போன்றவை முக்கிய அறிகுறிகள் ஆகும். பாதிப்பு ஏற்பட்ட 6 முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகள் காணப்படும். மேற்கு வங்கத்தில் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு அல்லது பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த பிறகு அறிகுறிகள் யாரிடமாவது காணப்பட்டால், அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை செல்ல வேண்டும்.

சாப்பிடும் முன்பு அனைத்து பழங்களையும் நன்கு கழுவவேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக சோப்பால்கைகளை கழுவ வேண்டும். பதநீர், கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பரா மரிப்பில்லாத தூர்வாராத கிணறுகளின் அருகே செல்லக்கூடாது.

மாவட்ட சுகாதார அலுவலர்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தமிழக அரசு நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதனால், நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சமோ, பயமோ கொள்ள தேவையில்லை.

மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ்; பறவை, விலங்கு கடித்த பழங்களை உண்ணக்கூடாது: சுகாதாரத்துறை
பெயர் சேர்க்க அளிக்கப்பட்ட அவகாசம் நிறைவு: பிப்.17-ல் இறுதி வாக்காளர் பட்டியல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in