

சென்னை: கொளத்தூரில் உள்ள அஞ்சல் நிலைய அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்.
மின்னணு பணப் பரிவர்த்தனையில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். சென்னை கொளத்தூரில் உள்ள அஞ்சல் நிலைய அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று திறந்து வைத்தார்.
6 மாதக் குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்கி, இந்த அஞ்சலகத்தின் பாஸ்போர்ட் சேவையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: வங்கி, காப்பீடு, ஆதார் என மக்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளும் அஞ்சல் நிலையங்களில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அரசுத் திட்டங்களின் பயன்கள் எந்தவித இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் சென்றடைகின்றன.
கடந்த 12 ஆண்டுகளில் 58 கோடிக்கும் அதிகமான ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல, சமூகநலத் திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மின்னணு பணப் பரிவர்த்தனையில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளை உலகத் தரத்துக்கு மேம்படுத்த வேண்டும்.
இதன்மூலம் இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, வடசென்னை எம்.பி.கலாநிதி வீராசாமி, கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு (தவெக), வெளியுறவு அமைச்சக இணைச் செயலாளர் ஈஷா ஸ்ரீவத்சா, தமிழக வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆர். விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.