

சென்னை: ‘தவெக ஆட்சியில் மேட்டூர் அணையை திறக்கவில்லை. மேகேதாட்டு விவகாரத்தை டெல்லியில் பேசவில்லை. விவசாயக் கடன் தள்ளுபடி என்று ஏமாற்றியதைப் போல, குறுவைத் தொகுப்பும் மும்முனை மின்சார அறிவிப்பும் ஏமாற்றும் திட்டம்தான்’ என திமுக விவசாய அணி மாநில செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் விவசாய புரட்சியை ஏற்படுத்திய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, விவசாயத்தை மேம்படுத்திய அந்த நடைமுறையை கூட இந்த நீர் மேலாண்மையிலும் அனுபவமில்லாத அரசு கடைபிடிக்க முடியாமல் தோற்றுப் போயிருக்கும் நிலையிலும் , வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் அறிவித்த திராவிட மாடல் அரசின் பிதாமகர் மு.க.ஸ்டாலினின் வேளாண்மை திட்டங்களை போல அல்லாமல், தற்போது வெற்று அறிவிப்பாக ரீல்ஸ் மாடல் அரசு வெளியீட்டிருக்கும் குறுவைத் தொகுப்பு மற்றும் மும்முனை மின்சார அறிவிப்பு என்பது அடுப்பை பற்றவைக்காமலேயே சமைப்பது போல உள்ளது என தி.மு.க விவசாய அணி கண்டனம் செய்கிறது.
தமிழ்நாட்டின் விவசாயப் புரட்சி என்பதும் விவசாயிகளின் பொற்காலம் என்பதும் திமுக ஆட்சி காலம்தான் என்பது மறைக்க முடியாத உண்மை, முக்கியமாக குறிப்பிட வேண்டுமென்றால், இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு வழங்கியது. ஆட்சி வந்தவுடன் 7,000 கோடி ரூபாய் விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்தது.
அதுமட்டுமல்ல திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும் விவசாயிகளை கைவிட்டதும் இல்லை. ஆளும் கட்சியின் விவசாய வேதனைகளால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளை ஆட்சியாளர்கள் கொச்சைப்படுத்தியபோது, அந்த குடும்பங்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி உதவியவர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் அனைத்து விவசாயம் சார்ந்த மாவட்டங்களிலும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு கூட்டங்கள், காவிரி மீட்பு பேரணி இப்படி பல விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திமுக செய்ததை தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒவ்வொரு ஆண்டும் சரியாக ஜூன் 12 மேட்டூர் அணைதிறப்பு, சோழர்கள் ஆட்சிக்கு பின்னர் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரும் பணிகள், கடைமடை பகுதி வரையிலான நீர் பாசனம், வேளாண் மையங்களில் இடுபொருட்களும், விதை உரம் உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்கள் போதுமான அளவு இருப்பு, அதிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அங்கு பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு இப்படி இவைகளெல்லாம் வேளாண் வளர்ச்சியை நாட்டிலேயே உயர்ந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக்காட்டியது திராவிட மாடல் அரசு.
தமிழ்நாட்டில் இந்த புரட்சிகளெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது குளிரூரட்டப்பட்ட கேரவனுக்குள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள், தற்போது விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை கூட அறியாமல் குறுவை தொகுப்பு திட்டத்தையும், மும்முனை மின்சாரத்தையும் அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் யாரோ எழுதிக் கொடுத்த விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதியை படித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்கு சேகரித்த அவர்கள் தற்போது , அதைக் கூட நிறைவேற்ற வக்கின்றி குறுவைத் தொகுப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்.
திராவிட மாடல் அரசின் மு.க.ஸ்டாலின் கடந்த ஆட்சியில் கொடுத்த வாக்குறுதியின்படி திமுக அரசு 2021-ஆம் ஆண்டு பொறுப்பேற்றவுடன், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தார்.
இப்படி விவசாயம் பற்றியும் , விவசாயிகளின் பிரச்சினை குறித்த புரிதல் இன்றியும், டெல்டா விவசாயத்தின் உயிர்நாடி மேட்டூர் அணை திறப்பு குறித்த அக்கறை இன்றியும் குறுவை திட்ட சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்து இருக்கிறது ரீல்ஸ் மாடல் அரசு.
கர்நாடகத்தில் மேகேதாட்டுவில் அணை கட்ட எல்லா முயற்சியை எடுக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக, தனது ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்கிற பயத்தில் மேகேதாட்டு அணை பிரச்சினையில் வாய்திறக்கவே இந்த அரசு பயப்படுகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் இந்த ரீல்ஸ் மாடல் அரசு, மாநிலம் முழுவதும் தங்களது அனுபவமற்ற நிர்வாக திறனால் ஏற்பட்டிருக்கும் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்காமல், அதை திசை திருப்பி மடைமாற்றம் செய்திட காரணம் தேடிக் கொண்டிருக்கும் அமைச்சர்களை கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளுக்கான குறுவை தொகுப்புத் திட்டம் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகவே அமைந்திருக்கிறது.
ஆனால், கடந்த கழக ஆட்சியின்போது மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறத்தால், 2021-ல் இருந்த 32,595 மெகாவாட் மின் நிறுவுதிறன் 36,671 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டு, மாநிலத்தில் மின்வெட்டு இல்லாத நிலை உருவாக்கப்பட்டது.
விவசாய இணைப்புகள்: மூன்றாண்டுகளில் சுமார் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க ஆணையிடப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இப்படி மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அனைத்து துறைகளுமே விவசாய மேம்பாட்டை மையப்படுத்தி செயல்பட்டதால்தான், திமுக ஆட்சியின்போது நெல் உற்பத்தி பல புதிய உச்சங்களை எட்டியது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நெல் உற்பத்தி 120 லட்சம் டன் என்ற அளவைத் தாண்டியது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 4 ஆண்டுகளில் 42 லட்சத்திற்கும் அதிகமான மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
திமுக அரசின் 4 ஆண்டு காலத்திலேயே சுமார் 42,61,386 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைத்தது. நெல் கொள்முதல் ஈரப்பத அளவினை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிகரிக்க ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்து அதனை நடைமுறைப்படுத்தியது. விவசாயிகளின் நலனைக் காக்க, ஒன்றிய அரசின் ஆதார விலையுடன் மாநில அரசின் சார்பில் கூடுதல் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
ஆனால் திட்டங்களை மட்டுமே அறிவித்து “ரீல்ஸ் போடுங்கள் ஆட்சி தொடர்ந்துவிடும்” என்கிற கொள்கைகளோடு ஆட்சி நடத்தும் தற்போதைய ஆட்சியாளர்கள், குறுவைத் தொகுப்பு , மும்முனை மின்சாரம் போன்ற வெற்று அறிக்கைகளை வெளியிடும் முன், அண்டை மாநிலமான கர்நாடகாவில் தனது ஆட்சி நடக்க தமிழ்நாட்டில் முட்டுக் கொடுக்கும் காங்கிரஸ் கட்சி ஆள்வதால், அவர்களிடம் இணக்கமாக பேசி காவிரி நீரை பெறவேண்டும் , மேகேதாட்டு அணை கட்டுவதை எதிர்த்து பேசவேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி வேளாண்மை கொள்கைகள் திட்டங்களை விவாதித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். விவசாய அமைப்பு பிரதிகளை அழைத்து பேசவேண்டும்.
எழுதிக் கொடுக்கும் அறிக்கைகளை ஏற்ற இறக்கத்தோடு பேசுவதற்கு முன்பு திமுக ஆட்சியின் சாதனைகளான, உபரி நிலத்தை மீட்டு விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்தது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நாட்டிலேயே முதன்முதலில் கொண்டுவந்தது, விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைத்தது, கரும்பு விலையை உயர்த்திக்கொடுத்தது, தமிழ்நாட்டில் உழவர் சந்தை அறிமுகம் செய்தது, கூட்டுறவு கடன் தள்ளுபடி அமலாக்கம் செய்தது, பயிர்க் கடன் வட்டி குறைப்பு, தமிழ் நாட்டில் உழவர் சந்திப்பு விரிவாக்கம் செய்தது, நெல் விவசாயிகளுக்கு சிறந்த ஊதியம் வழங்கியது,
பயிர் காப்பீட்டு மானியங்கள் மற்றும் இழப்பீடு வழங்கியது, ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், தாமிரபரணி- கருமேனியாறு - நம்பியார் இணைப்பு திட்டம், கரும்புச் சாலை மேம்பாட்டு முயற்சி, தென்னை விவசாயிகளுக்கான நல உதவி, உபரி நிலத்தை மீட்டு விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்தது, விளிம்புநிலை விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் என இப்படி விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும், வேளாண் வளர்ச்சிக்கும் திமுகவின் திட்டங்களில் சிலவற்றையாவது கொஞ்சம் படித்துப் பார்க்க வேண்டும். செய்வார்களா?’ எனத் தெரிவித்துள்ளார்.