

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தோழர் நல்லகண்ணு ஐயா மறைந்து விட்டார். எவ்வளவு பெரிய பேரதிர்ச்சி. ஒரு நூற்றாண்டுக் காலம் பொதுவுடைமை போராளியின் பயணம் நின்று விட்டது. தலைவருக்குத் தலைவராய், தோழருக்குத் தோழராய் இருந்த அந்த மகத்தான மாமனிதரை இனி நாம் எப்போது சந்திக்கப் போகிறோம்?
குன்றக்குடி ஆதீனத்தின் மீது, ஒரு ஆன்மீக நிறுவனத்தின் மீது அதன் அப்பழுக்கற்ற சமூக சேவையைக் கண்டு அரவணைத்துச் சென்ற அந்த அன்புக் கரங்கள் எங்கே? அன்பு பார்வையால், நாம் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட போது, அருகிருந்த மருத்துவரின் கரம் பற்றி, "பொன்னம்பல அடிகளார் இந்தத் தேசத்தின் சொத்து. காப்பாற்றிக் கொடுங்கள்" என்று கண்ணீர் மல்க வேண்டினார். அந்த அன்பு உள்ளம் எங்கே? அந்தத் தொழிலாளர் தோழர் மறைந்து விட்டாரா? இல்லை.
அனைத்து தொழிலாளத் தோழர்களின் உயிரணுக்களில் நிறைந்து விட்டார். வாழ்க அவர் புகழ். என்றும் வரலாற்றில் நின்று நிலைத்து நிற்கும் அவர் தொண்டு.