

கே.எஸ். அழகிரி
காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விரும்புகிறார்கள். அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது. இதை காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட்களும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
எங்களைப் பொறுத்தவரை திமுக எங்களுக்கு சிறந்த தோழமைக் கட்சி. நாங்கள் அவரிடம் பேரம் பேசத் தேவையில்லை. சிறந்த ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அதற்காக எங்கள் கட்சி கீழேபோக வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை.
காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விரும்புகிறார்கள். அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அது தவறில்லை.
நண்பர்களாக இருக்கிறவர்களில் ஒருவர் நல்ல சட்டை போட்டுள்ளார். அதேபோல, எனக்கும் ஒரு சட்டை கொடு என்று கேட்பது தவறு இல்லை. அதற்காக அவர் போட்டிருக்கிற சட்டையை பறிக்க வேண்டும் என்பது நோக்கமில்லை.
அதிமுகவை பொறுத்தவரை விளிம்பு நிலைக்கு சென்றுவிட்டது. தமிழகத்தின் உரிமையைப் பற்றி அவர்களால் பேச முடியவில்லை. அமித் ஷா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கின்றார், ஆனால், பழனிசாமி அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் என்கிறார். அந்த கூட்டணியைப் பொறுத்தவரை, எங்களைப் போன்ற தெளிவு இல்லை. கருத்து உடன்பாடு கூட அவர்களிடம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.