

“திமுக அரசு பொங்கலுக்கு ரூ. 3 ஆயிரம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்” என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க தொடக்க விழாவில் கலந்து கொண்ட கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்துத் துறையில் பல்வேறு குளறுபடிகள், ஊழல்கள் நடக்கின்றன. இருக்கும் துறைகளிலேயே போக்குவரத்துத் துறையில்தான் அதிகப்படியான ஊழல்கள் நடக்கின்றன.
திருடனுக்கு தேள் கொட்டியது போல் எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் அமைதியாக இருக்கின்றன. இதன் மூலம் எஸ்ஐஆர் நடவடிக்கை சரி என்பது தெளிவாகிறது. வெறும் அரசியல் காரணங்களுக்காகவே எஸ்ஐஆருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் என்ன தவறு? இந்த விவகாரத்தில் தமிழக அரசு இவ்வளவு கடுமையாக நடந்திருக்க வேண்டியதில்லை. இது மதம் தொடர்பான பிரச்சினை இல்லை. தீபம் ஏற்றுவது மண்ணின் மைந்தர்களின் உரிமை. தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசியல் செய்திருக்கக் கூடாது. தீபத்தூனை கிரானைட் தூண், எல்லைக் கல் எனக் கூறிவிட்டு, எதையுமே நிரூபிக்க முடியாத நிலையில் அரசு உள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு யாரோ தவறாக வழிகாட்டி உள்ளனர். தற்போது இந்த விவகாரத்தில் ஏன் தலையிட்டோம் என்ற நிலையில் அரசு உள்ளது. தீபத் தூணில் தீபம் ஏற்றும் உரிமை அனைவருக்கும் உள்ளது. திமுக அரசு பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.