

“கட்சி தன் கையில் இருந்தால்போதும், திமுக ஆட்சி செய்தால் நமக்கென்ன என்று சிலர் நினைக்கின்றனர்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேவகோட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தொகுதிக்கான அமமுக வேட்பாளராக தேர்போகி பாண்டியை அறிவித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது: வரும் தேர்தலில் வெற்றி பெற்று அமமுக-வினர் சட்டப்பேரவைக்குச் செல்வர். வாய்ப்புக்கிடைத்தால் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறுவர். அமமுக, கூட்டணிக்கு நிபந்தனை விதிக்கும் கட்சி அல்ல. நட்பு ரீதியான கட்சி. உரிய மரியாதை உள்ள கூட்டணியில் இடம் பெறுவோம்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி முடிவால் தான் “திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்” என்று கூறினேன். சிலர் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, மற்றவர்களுக்கு 2 கண்ணும் போக வேண்டுமென்று நினைக்கின்றனர். கட்சி தனது கையில் இருந்தால் போதும், திமுக ஆட்சி செய்தால் நமக்கென்ன என்றும் சிலர் நினைக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் அரசுக்கு மட்டுமின்றி அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது. அந்த விதிமுறைகளை பின்பற்றி செங்கோட்டையன் ஈரோட்டில் தவெக கூட்டத்தை சிறப்பாக நடத்தியுள்ளார். கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் கட்சிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அமமுக தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது. அதனால் எங்களை தவிர்த்துவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது. பிப்ரவரியில் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்பாக தொண்டர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
திமுக-வை வீழ்த்த சரியான அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை, உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால், பட்டியலில் சேர்க்க அனைத்துக் கட்சிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும்கட்சியை வாய் புளித்தது என்பதற்காக எதிர்ப்பவன் நான் அல்ல. 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதைத் தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றா விட்டால் திமுக-வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். தூயவர்கள், தீயவர்கள் யார் என்பதை தேர்தலில் மக்கள்தான் முடிவு செய்வர்” என்றார்.