

கிருஷ்ணசாமி
கோவை: போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனாவை அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியில் இருந்தும் முதல்வர் விஜய் நீக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர்களுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடனான தொடர்பு குறித்து வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இதுகுறித்து சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
முதல்வர் விஜய் ஊழலற்ற ஆட்சி, மது போதை இல்லாத ஆட்சி என்பதைத்தான் முக்கிய வாக்குறுதியாக கொடுத்துள்ளார். இந்நிலையில், தற்போதைய குற்றச்சாட்டை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதை சர்வதேச விவகாரமாக பார்க்க வேண்டும். தீய ஆட்சி சென்று தூய ஆட்சி வர வேண்டும். ஆனால், தூய ஆட்சி என்று சொல்லக் கூடிய இந்த ஆட்சியில் ஆதவ் அர்ஜுனா முக்கிய முகமாக இருக்கிறார். எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் முதல்வர் விஜய் நீக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் மவுனம் சாதிக்கக் கூடாது. அது அவருக்கு ஆபத்தாக மாறலாம்.
கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பணம் யாருடையது என கண்டுபிடிக்கப்பட வேண்டும்.அது ஆதவ் அர்ஜுனா கொடுத்த பணம் என்றால், அவருக்கு அந்த பணம் எங்கிருந்து வந்தது,இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசும் இதில் எங்களுக்கு தொடர்பு இல்லை என இருந்து விடாமல் முழுமையாக விசாரிக்க வேண்டும். ஆளுநர் இதில் தலையிட வேண்டும். சிபிஐ விசாரணையும் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.