மதுரை: தமிழகத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தால் நிதி பற்றாக்குறை அதிகரித்து சாலை அமைப்பது உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். இத்திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதிய தமிழகம் கட்சி 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு மதுரை பாண்டிகோவில் அருகே ஜன.7-ல் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி மாநாடு நடைபெறுவதால் தேர்தலை ஒட்டி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மாநாட்டில் 2026 தேர்தல் தொடர்பான பொதுவான வழிகாட்டுதல்கள் இடம் பெறும். எப்படி தேர்தலை அணுக வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவோம்.
தேர்தல் கூட்டணி இன்னும் முடிவெடுக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் மாதத்துக்கு பிறகு எப்போது வேண்டுமனாலும் நடக்கலாம். அரசியல் அதிகாரம் மட்டுமே விழிம்பு நிலை மக்களுக்கு தீர்வு அளிக்கும். அந்த வகையில் எங்கள் கூட்டணி பாதை இருக்கும். மாநாட்டில் எங்கள் அரசியல் பாதை எதை நோக்கி இருக்கும் என்பதை அறிவிப்போம்.
மாநாட்டில் பொதுவான அணுகுமுறைகளை தெரிவிப்போம். மாநாட்டு தீர்மானங்களே எங்கள் அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்யும். உறுதியான கூட்டணி அறிவிப்பு வெளியாக காலம் ஆகும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? இருக்காதா? என்ற கேள்வி உள்ளது. இதற்கு விரைவில் விடை தெரியும்.
தமிழக அரசு தேர்தலை மனதில் வைத்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் மற்றும் பொங்கல் பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் கடந்த காலங்களில் அமலில் இருந்து ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தவே கேட்டனர். பெயர் மாற்றம் செய்தோ, எந்த வகையிலும் பலனளிக்காத திட்டத்தையோ கேட்கவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்காது. பட்ஜெட்டில் 20 சதவீத நிதி புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஒதுக்கப்படும்.
தமிழகம் ஏற்கெனவே கடுமையான நிதிப்பற்றாக்குறையில் உள்ள நிலையில் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். இதனால் தமிழகத்தில் வேறு எந்த புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். சேத்துக்குள் காலை நுழைத்தது போல் தெரிகிறது. நடைமுறைப்படுத்தும் திட்டம் போல் தெரியவில்லை. அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம் போல் உள்ளது. கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் வந்தால் மட்டுமே அமல்படுத்த முடியும். இல்லாவிட்டால் அமல்படுத்த முடியாது. இதனால் அரசு கஜானா முழுமையாக காலியாகும்.
ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு திட்டமும் மக்களை கவராது. தற்போது மக்களின் தேவை, பிரச்சினைகள் வேறுவிதமாக உள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தியிருக்க வேண்டும். இதில் தமிழக அரசு ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்த தேர்தலிலும் முதல்வராவார் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இப்போது பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாக வேண்டுமானாலும் கருத்து கணிப்பு வெளியிடலாம்.
வெனிசுலா அதிபர் கைது நடவடிக்கை இந்த நூற்றாண்டின் தவறான நடவடிக்கையாகும். நாட்டின் வளத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும். இந்தியா பொத்தம் பொதுவாக இல்லாமல் பகிரங்கமாக கண்டிக்க வேண்டும். உலக நாடுகளை அபகரிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையால் இந்தியாவுக்கும் ஆபத்து நேரிடலாம். அமெரிக்காவின் செயலை ஆரம்பத்திலேயே கண்டிக்க வேண்டும்” என்று அவர் கூறினார். அப்போது புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ஷியாம் உடனிருந்தார்.