

திருநெல்வேலி: பில்லியர்ட்ஸ் போட்டிகளில் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற மனோஜ் கோத்தாரி (64) காலமானார். திருநெல்வேலியிலுள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் மனோஜ் கோத்தாரி. பில்லியட்ஸ் விளையாட்டு வீரரான இவர் கடந்த 1990-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
மேலும் பில்லியர்ட்ஸ் போட்டிகளுக்கு அகில இந்திய தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவரது விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இவருக்கு கடந்த 2005-ம் ஆண்டு தயான் சந்த் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையை நாடியுள்ளார். அந்த மருத்துவமனையின் திருநெல்வேலி கிளையில் நன்கொடையாளர் மூலம் கல்லீரல் முன்னுரிமை அடிப்படையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக கடந்த மாதம் திருநெல்வேலியில் உள்ள அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கடந்த 26-ம் தேதி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருக்கு நீட்டா கோத்தாரி என்ற மனைவியும், சவுரவ் கோத்தாரி என்ற மகனும் உள்ளனர். சவுரவ் கோத்தாரியும் பில்லியட்ஸ் விளையாட்டு வீரர் ஆவார். இவரும் பில்லியர்ஸ் விளையாட்டு போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.