மறைவின் விளிம்பில் மண்ணின் கலை: அண்ணாந்து பார்க்க வைக்கும் கொல்லிக்கால் ஆட்டம்!

மறைவின் விளிம்பில் மண்ணின் கலை: அண்ணாந்து பார்க்க வைக்கும் கொல்லிக்கால் ஆட்டம்!
Updated on
2 min read

கொல்லிக்கால் கட்டை ஆட்டம் சேலம், தருமபுரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் திருவிழாக்களில் ஆடப்படும் பாரம்பரிய வேடிக்கை நடனமாகும்.

கொக்கலிக்கா ஆட்டம், மரக்கால் கட்டை ஆட்டம் என்ற பெயரில் ஆடப்படும் இந்த வகை ஆட்டம் தற்போது மறைந்து வருகிறது. கிருஷ்ணகிரி இசைப் பள்ளியில் மரக்கால் நாட்டிய பட்டய வகுப்பு, தமிழக அரசின் உதவியுடன் நடந்து வருவது ஆறுதல் அளிக்கும் தகவல். தற்போது கொல்லிக்கால் கட்டை ஆட்டத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, தனாக கற்றுக் கொண்டுவரும் இளைஞர் தருமபுரி முத்துச் செல்வன் அண்மையில்தான் கல்லூரிப்படிப்பை முடித்துள்ளார்.

கொல்லிக்கால் கட்டை ஆட்டம், கொக்கலிக்கா ஆட்டம் இதற்கெல்லாம் என்ன பொருள் என்று கேட்டதற்கு, செவி வழிக்கதை ஒன்றை சான்றாகச் சொல்கிறார். "வனாந்திரப் பகுதிகளில் தவம் செய்து கொண்டிருந்த தேவர்களின் தவத்தைக் கலைக்க அசுரர்கள் வனப் பகுதிகளில் விஷப் பூச்சிகளை ஏவினார்களாம். தேவர்கள் தங்கள் தவத்துக்கு குந்தகம் நேராதபடி பாதுகாக்கும்படி, ஆதிவாசிகளைக் கேட்டுக் கொண்டார்களாம்.

தங்களின் கால்களில் பூச்சிகள் கடிக்காமல் இருக்க, மரத்தாலான கால்களைக் கட்டிக்கொண்டு விஷப் பூச்சிகளை வேட்டையாடி தேவர்களின் தவத்துக்கு பாதுகாப்பாக இருந்தனர் கானகவாசிகள். இதற்காக அவர்கள் காலில் கட்டிக்கொண்ட கட்டைகளுக்கு கொல்லிக்கால் கட்டை என்ற காரணப் பெயர் உண்டாயிற்று. பின்னர் கொக்கலிக்கா என்று மருவியது. நுணா மற்றும் மத்தி மரக் கட்டைகளால் மரக்கால்கள் செய்யப்படுகின்றன. ஆலமரத்தின் விழுதுகளில் இருந்தும் இக்கட்டைகள் தயாரிக்கப்படு கின்றன.

தாரை, தம்பட்டை, பம்பை அடித்தபடி காடுகளில் விலங்குகளை விரட்டும் போது தானாக ஒரு தாளம் பிறக்கும். அதுதான் இந்த ஆட்டத்தின் தொடக்கம்.

ஆனால், இப்போது கோயில்களில் நேர்த்திக் கடன் கழிக்க ஆடப்படுகிறது. இதை காலில் கட்டி ஆடுவது சந்தோஷமாக இருக்கிறது. ஏனெனில், மற்ற ஆட்டங்களை நேராகப் பார்ப்பார்கள். இந்த ஆட்டத்தில்தான் எங்களை மக்கள் அண்ணாந்து பார்ப் பார்கள். எங்கள் ஆட்டக் குழுவில் ஒரு பெண்ணும் இருக்கிறார்.

நாங்கள் பாடமாட்டோம். தவில், நையாண்டி மேளம், பம்பை இசைக்கு ஏற்ப ஆடுவோம். தஞ்சாவூர் பக்கம் ஒத்து பம்பை என்பார்கள். எங்கள் ஊரில் வெண்கல பம்பை என்பார்கள். கொல்லிக்கால் நடனம் ஆடியபடியே பம்பையும் வாசிப்பேன். எந்த வேஷம் போட்டாலும் கால் தெரியக்கூடாது. அதனால் உயரமாக பேண்ட் தைத்து போட்டுக்கொண்டு ஆடுவோம். இந்த ஆட்டம் ரொம்பப் பழமையானது" என்று கூறும் முத்துச்செல்வன், சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆட்டத்துடன் கொல்லிக்கால் ஆட்டமும் ஆடப்பட்டதாகக் கூறுகிறார்.

“கட்டக்கூத்து என்ற நடன வகைக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. அது எங்களைப்போல கட்டைகளை காலில் கட்டி ஆடும் நடனமல்ல. கர்ணன், துரியோதனன் போன்ற இதிகாசப் பாத்திரங்களை ஏற்று நடிப்பவர்கள். தஞ்சை முதலான பகுதிகளில் கிடைக்கும் தக்கையைவைத்துக் கட்டி கட்டுகளில் கண்ணாடி அலங்காரம் செய்து கட்டைக்கட்டி ஆடும் தெருக்கூத்து கலைஞர்கள் அவர்கள். அதன் பெயர்தான் கட்டக்கூத்து. நாங்கள் ஆடுவது மரக்கால் ஆட்டம். கோயில் திருவிழாக் கூட்டத்தில் வண்ண உடைகள் அணிந்து, குறுக்கும் நெடுக்குமாக அதீத உயரத்துடன் நடந்து போகும் எங்களைப் பார்த்து மக்கள் அதிசயிப்பார்கள்” என்று கூறியமுத்துச்செல்வனிடம், “கால் வலிக்காதா உங்களுக்கு?” என்று கேட்டேன்.

“வலிக்கும்தான். சில நேரத்தில் ரத்தம்கூட கட்டிக் கொள்ளும். ஆனால், இந்தக் கொல்லிக்கா மரக்கட்டைகள் காலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்து வதில்லை. அதேநேரத்தில், விழுந்தால் அதோகதிதான். முதுகெலும்பில் அடிபடும். ஆனால் எங்களை தேவர்கள் காப்பாற்றி விடுவார்கள்" என்றார்.

“நீங்கள் உண்மையிலேயே உயர்ந்த மனிதர்தான்!" என்றேன். சிரித்துக் கொண்டார் முத்துச்செல்வன்.

மறைவின் விளிம்பில் மண்ணின் கலை: அண்ணாந்து பார்க்க வைக்கும் கொல்லிக்கால் ஆட்டம்!
தொல்லியல் ஆய்வில் பெண்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in