“பாஜகவுக்கு மட்டுமல்ல சனாதனத்துக்கும், கடவுளுக்கும் எதிரி திமுகதான்” - குஷ்பு காட்டம்

“பாஜகவுக்கு மட்டுமல்ல சனாதனத்துக்கும், கடவுளுக்கும் எதிரி திமுகதான்” - குஷ்பு காட்டம்
Updated on
1 min read

புதுச்சேரி: “நீங்கள் வெல்லும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா?” என்று காங்கிரஸ், திமுகவுக்கு நடிகை குஷ்பு கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரியில் பாஜக அனைத்து பிரிவுகளின் மாநாட்டில் இன்று மாலை பங்கேற்ற தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு பேசியதாவது: “புதுச்சேரியில் பாஜக ஆட்சி நடக்கிறது என்று சொல்வது பெருமையாக இருக்கிறது. மோடியை திட்டுவதற்காக மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சிந்திக்கிறார்.

சின்னக்குழந்தை போல் இல்லாமல் பெரியவர் போல் ராகுல் பேச வேண்டும். வாக்கு திருட்டு என பேசும் ராகுல்காந்தி, கேரளத்தில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலும், கர்நாடகத்தில் ஆட்சியமைத்த போது அது கிடையாதா? டெல்லியில் ராகுல் பேசுவதுபோல், தமிழகத்தில் ஸ்டாலின் பேசி வருகிறார். மத்திய அரசு எவ்வளவு நிதி தந்தது என்பது வெளிப்படையாகவுள்ளது. நீங்கள் வெல்லும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி வெற்றிபெற, செய்ய வேண்டியதை செய்யவேண்டும். பாஜகவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும், சனாதனத்துக்கும், கடவுளுக்கும் எதிரி திமுகதான். திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்ற திமுக விடவில்லை. திமுகவினரின் குடும்பத்தினர் கோயிலுக்கு செல்வார்கள்.

ஆனால் மக்கள் மத்தியில் வேறு முகம் காட்டுவார்கள். எனது தர்மம் சனாதனம் என்று சொல்வோம். ஜெய் ஸ்ரீராம் சொல்வோம். இதில் சிறுபான்மையினருக்கு எதிராக என்ன இருக்கிறது என்று சொல்லவேண்டும். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் செல்கிறது. ஆனால் தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக பிரச்சினையில் தொடர்புடைய அந்த "சார்" யார் என இதுவரை தெரியவில்லை. போதைபொருள் இல்லை என மக்களை ஏமாற்றும் வேலைதான் நடக்கிறது. திருப்பரங்குன்றம் விஷயத்தை இரண்டு நாள் பேசிவிட்டு யாரும் தெருவுக்கு வராதது எனக்கு வருத்தம் தான்.

பிரச்சினை வந்தால் பார்த்துக் கொள்ளலாம். இந்த தேர்தலில் புதுச்சேரி, தமிழகத்தில் பாஜக வெல்ல வேண்டும். தாமரை மலர்ந்தே தீரும் என பதிலடி தரவேண்டும்” என்றார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருப்பரங்குன்றத்தில் மக்கள் நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்படுகிறார்கள். திமுகவினர் இரட்டை முகத்துடன் இருக்கின்றனர். உத்தர பிரதேசம், பிஹாரில் பாஜக வெல்வது சந்தேகம் என்று கருத்துக் கணிப்பு வந்தபோது மிகப்பெரிய வெற்றி அடைந்தோம். இதுபோன்ற கணிப்பு தவறாக போக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கட்சிகள் இன்னும் நிற்கும் இடங்கள் முடிவாகவில்லை.

அசாம், மேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும். ஐந்து ஆண்டுகள் தூங்கிக்கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போதுதான் அறிவிப்புகளை வெளியிடுகிறார். தேர்தலுக்கு இரண்டு மாதம் முன்பாக மக்களை ஏமாற்றும் விஷயத்தை செய்கிறார்கள். புதுச்சேரியில் ரங்கசாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏதும் சொல்லவில்லை” இவ்வாறு குஷ்பு பேசினார்.

“பாஜகவுக்கு மட்டுமல்ல சனாதனத்துக்கும், கடவுளுக்கும் எதிரி திமுகதான்” - குஷ்பு காட்டம்
அரசு மருத்துவமனையில் காயமடைந்தவருக்கு தையல் போட்ட தூய்மைப் பணியாளர்: அன்புமணி கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in