பெரியாறு அணை மதகை மேவிய கேரள கழிவுகள்: தமிழகத்துக்கு நீர் திறப்பதில் சிக்கல்

பெரியாறு அணை மதகை மேவிய கேரள கழிவுகள்: தமிழகத்துக்கு நீர் திறப்பதில் சிக்கல்
Updated on
1 min read

குமுளி: பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரும் ஆனவச்சால் வாய்க்கால் இரும்பு தடுப்பு ஒட்டிய மண்தடுப்பில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கேரள கழிவுநீருடன் மரக்கிளைகள், பிளாஸ்டிக் கலப்பதால் மதகில் அடைப்பு ஏற்பட்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு தேக்கடி ஏரியில் இருந்து திறவை வாய்க்கால் மூலம் நீர் கொண்டு செல்லப்படுகிறது. பின்பு சுரங்கவாய்க்கால், ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் தரைப்பகுதியை வந்தடைகிறது.

இந்நிலையில் ஆனவச்சால் என்ற இடத்தில் உள்ள திறவைவாய்க்கால் பகுதி சரிவாக உள்ளதால் குமுளி, ஆனவச்சால், அட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், கழிவுதண்ணீர் இப்பகுதியை வந்தடைகிறது. மரக்கிளை, பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பதற்காக இங்கு தமிழக நீர்வளத்துறை சார்பில் இரும்பு தடுப்பு சல்லடைகள் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2 நாட்களாக குமுளி பகுதியில் பெய்த மழையினால் நீர்ப்பெருக்கு அதிகரித்து, இரும்பு தடுப்புக்கு அருகில் இருந்த மண்தடுப்பு உடைந்தது. இதனால் மழைநீரில் வந்த மரக்கட்டைகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு திடக்கழிவுகள் தமிழகத்துக்குச் செல்லும் தண்ணீரில் கலந்தது.

இந்த நீருக்கான மதகு தேக்கடி வனச்சரக நுழைவாயிலில் அருகில் உள்ளது. அங்கு இக்கழிவுகள் சென்று அடைப்பை ஏற்படுத்தியதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இவற்றை அகற்றும் பணி கடந்த 2நாட்களாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த மண்தடுப்பு பாதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் நீர்வளத்துறையினர் உரிய கவனம் செலுத்தாததால் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலப்பதுடன், குடிநீருக்கு கூட தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.

பெரியாறு அணை மதகை மேவிய கேரள கழிவுகள்: தமிழகத்துக்கு நீர் திறப்பதில் சிக்கல்
Chinna Chinna Aasai: என்று தணியும் லீலாக்களின் சுய தேடல்கள்?! | திரை தேவதைகள் 29

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in