

ராமநாதபுரம்: கீழக்கரையில் பல ஆண்டுகளாக பட்டா வழங்காமல் இருந்த குடியிருப்பு இடங்களுக்கு நடவடிக்கை எடுத்த, ராமநாதபுரம் ஆட்சியரிடம் சீர்வரிசை வழங்கி பெண்கள் நன்றி தெரிவித்து நெகிழவைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் காஞ்சனாம்குடி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடியிருக்கும் வீடு, அனுபவிக்கும் இடத்துக்கு பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படவில்லை.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் பட்டா வழங்கக் கோரி ஒரு மாதத்துக்கு முன் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில், அனைத்து இடங்களும் அளவீடு செய்யப்பட்டு, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத இந்தப் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து, அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் காய்கறி, பழங்களை சீர்வரிசையாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்த ஆட்சியரிடம் வழங்கி நன்றி தெரிவித்தனர். பின்னர் கொண்டுவந்த காய்கறி, பழங்களை முதியோர் இல்லத்துக்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழக மாநில துணைச் செயலாளர் அபுபக்கர் சித்திக் கூறும்போது, காஞ்சனாம்குடி மக்கள் தங்களது குடியிருப்பு இடங்களுக்கு 40 ஆண்டுகளாக பட்டா வாங்காமல் இருந்தனர்.
இதற்கு ஆட்சியரிடம் மனு அளித்ததும் 30 நாட்களுக்குள், கீழக்கரை வட்டாட்சியர் தலைமையில் நில அளவையர்கள் நிலத்தை அளவீடு செய்து, பல ஆண்டு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தனர். அதனால், ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து, சீர்வரிசை அளித்தோம்.
ஆட்சியர் நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, அவற்றை முதியோர் இல்லத்துக்கு வழங்க அறிவுரை கூறினார். தமிழக அரசு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.