

கோவை: மறைந்த கவிஞர் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் கோவையில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது.
இலக்கியத் துறையில் கவிஞர், எழுத்தாளர் புவியரசுவின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.
இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான புவியரசு இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான புவியரசு கோவையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 96.
கோவையில் வசித்து வந்தவர் கவிஞர் புவியரசு. இவரது மனைவி, மகன் இறந்துவிட்ட நிலையில், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இலக்கியத் துறையில் கவிஞர், எழுத்தாளர் புவியரசுவின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான புவியரசு மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
சமூகப் பொறுப்பை வலியுறுத்துகின்ற கவிதைகளாலும், உலக இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் புவியரசு.
‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது, ’புரட்சிக்காரன்’ என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
கவிஞர் புவியரசு மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலக்கியத் துறையில் திரு. புவியரசு அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.” எனத் தெரிவித்திருந்தார்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று (ஜூலை 1) காலை 9 மணிக்கு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் நடைபெற்றது.