

மதுரை: கரூரில் கோயில் நிலங்களைப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கிதற்கு எதிரான வழக்கில் கோயில் சொத்து தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கரூரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமாக 15 கிராமங்களில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள 3,084.95 ஏக்கர் நிலங்களைபத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
பதிவுக்கான தடையை விலக்கக் கோரி 3,390 பேர் அரசுக்கு மனு அளித்தனர். மனு அடிப்படையில் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான தடையை நீக்கி உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவால் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோயில் நிலங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதாகும்.இது சட்டவிரோத நடவடிக்கை. எனவே கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்வதற்கான தடையை நீக்கிப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அரசாணையைச்செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் தரப்பில், கோயில் நிலங்கள் பதிவுக்கான தடையை நீக்கி கரூர் மாவட்ட ஆட்சியர், சென்னை, கரூர் அறநிலையத் துறை இணை ஆணையர் ஆகியோர் ஒரே நாளில் உத்தரவிட்டுள்ளனர் எனக் கூறப்பட்டது. அரசுத் தரப்பில், கோயில்களுக்குச் சொந்தமான சில இனாம் நிலங்கள் 1980-ம் ஆண்டிலேயே கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 1965 மற்றும் 67-வது ஆண்டுகளில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டு பலரது பெயருக்கு விற்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக விசாரித்ததில் பதிவுக்கான விண்ணப்பித்தோர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசிப்பது தெரியவந்தது. இதையடுத்தே கோரிக்கை ஏற்கப்பட்டு தடை விலக்கப்பட்டது. முன்னதாக கோயில் அறங்காவலர் குழுவுடன் ஆலோசிக்கப்பட்ட பிறகே முடிவெடுக்கப்பட்டது. மேலும் மனுதாரருக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் கிடையாது. 3-வது நபர் வழக்குத் தொடர முடியாது.
எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அறநிலையத் துறை சார்பில், மனுதாரர் ஏற்கெனவே கோயில் அறங்காவலர், செயல் அலுவல் நியமனம் தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முன்பு செட்டில்மென்ட்பட்டா வழங்கப்பட்டோரின் கோரிக்கை அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கோயிலுக்குக் கொஞ்சமாவது நிலங்கள் உள்ளனவா எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், கோயில் நிலங்கள் எவ்வளவு, அதன் மதிப்பு என்ன, அந்த நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளது என்பது தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் கரூர் மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் ஜூலை 29-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆக.11-ல் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டனர்.