ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு 20% கட்டண அறிவிப்பு வாபஸ்: ஒரே நாளில் முடிவை மாற்றிய ட்ரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு 20% கட்டண அறிவிப்பு வாபஸ்: ஒரே நாளில் முடிவை மாற்றிய ட்ரம்ப்
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிக கப்பல்களுக்கு 20 சதவீத பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளார். இந்த நீர்வழிப்பாதையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள உடன்பட்டுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை அவர் அறிவித்துள்ளார்.

தனது ட்ரூத் சோஷியல்  பக்கத்தில் அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: “மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட மிகச் சிறந்த ஆலோசனைகளின் அடிப்படையில், 20 சதவீதகட்டணத்திற்குப் பதிலாக வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளவிருக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை மாற்றியமைக்க நான் முடிவு செய்துள்ளேன். 

இந்த முதலீடுகள் மிக பிரம்மாண்டமானதாகவும், அதே நேரத்தில் அந்த நாடுகளின் எதிர்காலத்துக்கு சாதகமான நன்மைகளைத் தருவதாகவும் அமையும். இதன் மூலம் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் தொழிற்சாலைகள், உற்பத்தி ஆலைகள் மற்றும் உபகரணங்கள் பெருகுவதை நாம் காண்போம். இது பல மில்லியன் கணக்கான உயர் ஊதியம் கொண்ட அமெரிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும், ஈரான் துறைமுகங்களுக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் அல்லது ஈரான் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் முழுமையான முற்றுகை அமல்படுத்தப்படும். 

ஈரான் தலைமை அந்நாட்டை முழுமையான அழிவை நோக்கிய பாதையில் கொண்டு செல்கிறது. ஈரான் லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற நாட்கள் முடிந்துவிட்டன, மிக முக்கியமாக ஈரான் ஒருபோதும் அணுஆயுதம் பெற அனுமதிக்கப்பட மாட்டாது" என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, அமெரிக்காவின் 20 சதவீத கட்டண முன்மொழிவை விமர்சித்த  ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “20 சதவீதம் என்பது நிச்சயமாக மிக அதிகம், நாங்கள் நியாயமாக நடப்போம்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தியின் நிர்வாகத்தில் அமெரிக்காவிற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், தங்களின் அனுமதியின்றி அமெரிக்கப் படைகள் ஊடுருவ முயன்றால் அது போராகக் கருதப்பட்டு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரானின் கூட்டுப் படைப்பிரிவு எச்சரித்துள்ளது. 

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு 20% கட்டண அறிவிப்பு வாபஸ்: ஒரே நாளில் முடிவை மாற்றிய ட்ரம்ப்
எந்த நேரத்திலும் நீதிமன்றங்களை நாட முடியுமா? - கோரிக்கையை பரிசீலிக்கும் உச்ச நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in