

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திரிமுருகன் என்பவரால் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிரபாகரன், செல்வகுமார், ஆனந்தஜோதி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.பி.பர்திவாலா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘இந்த விவகாரம் தொடர்பாக எதிர்தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு விளக்கமளித்து மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும், எனவே வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்தார்.
அப்போது நீதிபதிகள், ‘அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாதபோது விளக்க மனு தாக்கல் செய்ய எதற்காக கூடுதல் அவகாசம் கோருகிறீர்கள்’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தில் தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.