

ஆக்லாந்து: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் அன்ஷுல் காம்போஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அண்மையில் முடிந்த டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்கியது.
இந்த முதல் போட்டி ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி சார்பில் டிம் செய்ஃபெர்ட் 38, டேரில் மிட்செல் 28, கிளென் பிலிப்ஸ் 30, டிக்னர் 34 ரன்கள் எடுத்தனர்.
இந்திய பந்து வீச்சாளர்களில் அன்ஷுல் காம்போஜ் 10 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் 4, குர்னூர் 3 விக்கெட் எடுத்தனர்.
இந்திய அணி இலக்கை விரட்டிய போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த்-லீவிஸ் முறையின் படி இந்திய அணிக்கான இலக்கு 32 ஓவர்களில் 143 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
அனுபவ வீரர் விராட் கோலி, 51 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷுப்மன் கில் 37, ஷ்ரேயஸ் 15 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 22.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தொடரின் அடுத்த ஆட்டம் வரும் 7-ம் தேதி வெல்லிங்டனில் நடைபெற உள்ளது.
நியூஸிலாந்துக்கு அதிரச்சி
சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 12 தொடர்களில் முதல்முறையாக தோல்வி கண்டுள்ளது நியூஸிலாந்து அணி. கடைசியாக கடந்த 2019-ல் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரின் முதல் போட்டியை நியூஸிலாந்து இழந்திருந்தது. அப்போதும் இந்தியா அணிதான் நியூஸி.யை வீழ்த்தி இருந்தது. அதன் பின்னர் தொடரின் முதல் போட்டியை இழக்காத நியூஸிலாந்து அணி தோல்வி கண்டுள்ளது இப்போதுதான்.