

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். சிபிஐ அலுவலகத்தில் அவர் இன்று ஆஜராகிறார்.
கரூரில் கடந்த 2025 செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த ஜன.12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 2-வது முறையாக ஜன.19-ம் தேதி ஆஜரான அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 3-வது முறையாக மார்ச் 10-ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. கட்சிப் பணிகள் காரணமாக விஜய் 15 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த சிபிஐ மார்ச் 15-ம் தேதி (இன்று) அவர் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜய் நேற்று மாலை தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட 7 பேரும் உடன் சென்றுள்ளனர். டெல்லி தாஜ் மான்சிங் ஓட்டலில் தங்கும் விஜய், இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளார். விசாரணை முடிந்து சென்னை திரும்புகிறார்.