

கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகே வைக்கப்பட்டிருந்த பதாகை முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாநில துணை பொதுச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்எல்ஏ ம.சத்யா, மாவட்டச் செயலாளர்கள் வி.பி.மதியழகன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர். படம்: க.ராதாகிருஷ்ணன்
கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு உறவினர்கள், தவெகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சட்டப்பேரவை பொதுத் தேர்தலையொட்டி கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த துயர சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தவெக சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்களுக்கு பதிலாக, எரியும் மெழுகுவர்த்தி படங்கள், அதன் கீழே உயிரிழந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.சத்யா, மாவட்டச் செயலாளர்கள் வி.பி.மதியழகன் (மேற்கு), பாலசுப்பிரமணியன் (கிழக்கு) உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் மலர்வளையம் வைத்தும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மவுன அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மலர்வளையம் வைத்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோர சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு கடந்துவிட்டது.
இத்துயர சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலி’ என தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் உருக்கம்: முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த ஆண்டு இதே நாள் (செப்.27) என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழக உறவுகளின் மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக அமைந்துவிட்ட நாள். நாமும், நம் கரூர் சொந்தங்களும், தவெக சொந்தங்களும் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.