

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: ‘‘கரூர் துயரச் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு முறையாகப் பதில் அளித்து இருக்கிறேன்’’ என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூரில் நடைபெற்ற தவெகவின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில், தவெக தலைவர் விஜய் 3 முறை டெல்லி சென்று சிபிஐ விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சம்மன் வந்ததைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் (17-ம் தேதி) டெல்லி சென்று சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் அன்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரூரில் நடந்த துயரச் சம்பவம் குறித்து, சில கேள்விகளை என்னிடம் சிபிஐ அதிகாரிகள் முன்வைத்தனர். அதற்கு முறையான பதிலை வழங்கி இருக்கிறேன். குறிப்பாக சாட்சிகளின் அடிப்படையில் அன்று நடைபெற்ற சம்பவம் குறித்து கேள்விகளைக் கேட்டனர். அந்த கேள்விகள், அதற்கான எனது பதில்கள் குறித்து பொதுவெளியில் கூறுவது சரியாக இருக்காது. ஆனால் முறையான கேள்விகளுக்கு நான் முறையான பதில்களை அளித்திருக்கிறேன்.
காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை என்னிடம் விசாரணை நடத்தினர். எத்தனை கேள்விகள் கேட்டார்கள் என்பது தெரியவில்லை. நான் சம்பவ இடத்தில் களத்தில் இருந்து பணியாற்றியதால், அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் முறையான பதில்களைக் கூறியுள்ளேன். மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்களா என்பது குறித்து எதுவும் கூறவில்லை. இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.