இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் உளவுத் துறை அமைச்சர் உயிரிழப்பு

ஹார்முஸ் ஜலசந்தி அருகே ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசியது அமெரிக்கா
இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் உளவுத் துறை அமைச்சர் உயிரிழப்பு
Updated on
2 min read

டெல் அவிவ்: இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் ஈரானின் உளவுத்​துறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப் உயி​ரிழந்​துள்​ளார். மேலும், ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி அருகே ‘பங்​கர் பஸ்​டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது.

அமெரிக்க மற்​றும் இஸ்​ரேலிய படைகளுக்​கும், ஈரானுக்​கும் இடை​யில் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதனால், வளை​குடா நாடு​களிடையே பதற்​ற​மான சூழல் நிலவி வரு​கிறது. இந்​நிலை​யில், இஸ்​ரேல் நடத்​திய புதிய தாக்​குதலில் ஈரானின் உளவுத் துறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப் கொல்​லப்​பட்​ட​தாக, இஸ்​ரேலின் பாது​காப்​புத் துறை அமைச்​சர் இஸ்​ரேல் கட்ஸ் நேற்று அறி​வித்​துள்​ளார். இதை ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் உறுதி செய்துள்ளார்.

இஸ்​ரேல் நாட்டு அமைச்​சர் இஸ்​ரேல் கட்ஸ் மேலும் கூறும்​போது, “ஈரானின் எந்​தவொரு மூத்த தலை​வரையோ அல்​லது அதி​காரியையோ கொல்​லும் அதி​காரத்தை இஸ்​ரேல் ராணுவத்​துக்கு இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு வழங்​கி​யுள்​ளார். எந்​த​வித அனு​ம​தி​யை​யும் பெறாமலேயே ஈரான் மீது தாக்​குதல் மேற்​கொள்ள பிரதமர் நெதன்​யாகு எங்​களுக்கு அனு​மதி தந்​துள்​ளார். இதைத் தொடர்ந்து இஸ்​ரேல் நடத்​திய புதிய தாக்​குதலில்

ஈரான் உளவுத்துறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப் உயி​ரிழந்​து​விட்​டார். இந்த உயி​ரிழப்​பைத் தொடர்ந்து உலகின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து பல்​வேறு ஆச்​சரிய​மான தகவல்​கள் வரலாம்" என்​றார்.

ஏற்​கெனவே, இஸ்​ரேல், அமெரிக்கா ஆகிய நாடு​கள் நடத்​திய தாக்​குதல்​களில் ஈரானின் மூத்த பாது​காப்பு அதி​காரி அலி லாரிஜானி மற்​றும் பசிஜ் துணை ராணுவப் படை​யின் தலை​வர் கோலம்​ரெசா சுலை​மானி ஆகியோர் நேற்று முன்​தினம் கொல்​லப்​பட்​டனர்.

மேலும், கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் இணைந்து நடத்​திய திடீர் தாக்​குதலில் ஈரானின் தலைமை மதகுரு​வும், உச்​சத் தலை​வரு​மான அயத்​துல்லா அலி காமேனி கொல்​லப்​பட்​டார். இதையடுத்து ஈரானின் புதிய உச்​சத் தலை​வ​ராக காமேனி​யின் மகன் மோஜ்தபா காமேனி பொறுப்​பேற்​றுள்​ளார். அதனால் ஈரானில் ஆட்சி மாற்​றம், தலைமை மாற்​றம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்​பார்ப்​பது நடக்​க​வில்​லை.

முன்​ன​தாக ஈரான் மீதான தாக்​குல் காரண​மாக, ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை மூடு​வ​தாக ஈரான் அறி​வித்​தது. இந்த வழி​யாக செல்​லும் எண்​ணெய் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டன. கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து ஐந்​தில் ஒரு பங்கு ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக நடை​பெறு​வ​தால், இங்கு பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட போர்க் கப்​பல்​களை அனுப்பி நேட்டோ படைகள் உதவ வேண்​டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்​தார். அந்த கோரிக்​கையை நேட்டோ நாடு​களின் தலை​வர்​கள் நிராகரித்​தனர்.

இதையடுத்து அமெரிக்​காவே நேரடி​யாக களத்​தில் இறங்​கி​யுள்​ளது. ஹார்​முஸ் ஜலசந்​தியை ஒட்​டி​யுள்ள கரைப் பகு​தி​களில் ஈரான் ஏவு​கணை தளங்​கள் பல உள்​ளன. இங்​கிருந்​து​தான் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் செல்​லும் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படு​கிறது. பாதாளத்​தில்​உள்ள இந்த ஏவு​கணை கிடங்​கு​களை குறி வைத்து 2,200 கிலோ எடை​யுள்ள ‘பங்​கர் பஸ்​டர்’ குண்​டு​களை அமெரிக்க ராணுவம் வீசி​யது. இந்த குண்​டு​கள் பா​தாள பகு​தி​களை ஊடுருவி தாக்​கும் திறன் படைத்​தவை. இந்த குண்​டுகளை ஈ​ரான்​ மீது வெற்​றிகர​மாக வீசிய​தாக அமெரிக்​க ​ராணுவம்​ எக்​ஸ்​ தளத்​தில்​ தெரிவித்​துள்​ளது. இதுபோன்ற தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுப்போம் என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது.

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது ஈரான்

ஈரானில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை புதன்கிழமை ஈரான் வந்து சேர்ந்ததாக டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

இந்த உதவிப் பொருட்களை ஈரானில் உள்ள செம்பிறை சங்கம் பெற்றுக் கொண்டதாகவும் இந்த உதவிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் கூறியுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் ‘எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்பிற்குரிய இந்திய மக்களிடம் இருந்து பெற்ற மருத்துவ உதவிகளின் முதல் தொகுப்பு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. கனிவான இந்திய மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

பிற நாடுகளுக்கு உதவி வழங்கும் ஒரு முக்கிய நாடாக சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா உருவெடுத்துள்ளது. அமெரிக்க - இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் ஈரான் போராடி வரும் வேளையில் இந்த உதவி வழங்கப்படுகிறது. இப்போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 1,300-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் 7,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அலி பஹ்ரேனி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in