கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: அரசாணை ரத்து எதிர்த்து மேல்முறையீடு

உச்ச நீதிமன்றத்தில் ஆக.14-ல் விசாரணை
உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கி பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அந்த உத்தரவுக்குத் தடை கோரிய மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் 14-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கரூரில் கடந்த ஜூலை 10-ம் தேதி நடை பெற்ற நிகழ்வில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாதகவின் தீரன் திருமுருகன், மதுரை வழக்கறிஞர் சீனி அகமது உள்ளிட்ட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெரிசலில் சிக்கிஉயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், நியமன ஆணை ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பிரபாகரன் செல்வகுமார் மற்றும் பி.ஆனந்தஜோதி ஆகியோர் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

‘அரசு வழங்கிய பணி ஆணை கருணை அடிப்படையிலானது அல்ல; மாறாக ஒரு குடும்பத்தின் மறுவாழ்வுக்கானது. தவிர, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று அதில் கோரியுள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆக.14-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

<div class="paragraphs"><p><em><ins>உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்</ins></em></p></div>
முதல்வர் விஜய் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in