

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்பாக சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு கரூர் நகர இன்ஸ்பெக்டர் ஜி.மணிவண்ணன் 2-வது முறையாக ஆஜரானார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியும், சிலரை போன் மூலம் அழைத்தும், நேரில் சென்றும் அக்.30-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த கரூர் நகர இன்ஸ்பெக்டர் ஜி.மணிவண்ணனிடம் அக்.30-ம் தேதி முதற்கட்டமாக விசாரணை தொடங்கப்பட்டது. தொடர்ந்து வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பவர் கிரிட், மின் வாரிய, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். நவ.3-ம் தேதி பனையூர் தவெக அலுவலகத்திற்கு நேரில் சென்று பிரச்சார வாகன கேமரா பதிவுகள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விபரங்களை கேட்டு சம்மன் வழங்கப்பட்டது.
நவ.8 மற்றும் 9-ம் தேதி ஆகிய இரு நாட்கள் தவெக வழக்கறிஞர் அரசு உள்ளிட்டோர் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய வீடியோக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்களையும் ஒப்படைத்து 2 நாட்களாக விளக்கம் அளித்தனர்.
நவ.16-ம் தேதி நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ்ஜோஷியிடம் விசாரணை நடைபெற்றது. நவ.19-ம் தேதிக்கு பிறகு 4 நாட்கள் சிபிஐ விசாரணைக்கு யாரும் ஆஜராகாத நிலையில், நவ.24-ம் தேதி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பவுன்ராஜ், வழக்கறிஞர் அரசு ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.
2-வது நாளாக நேற்று புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல்குமார், வி.பி.மதியழகன், வழக்கறிஞர் அரசு ஆகியோர் ஆஜராகினர். 3 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர்கள் புறப்பட்டனர். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் மதியம் உணவுக்கு பிறகு மீண்டும் ஆஜரான நிலையில், இரவு 7 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று (நவ.26) கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு அக்.30-ம் தேதிக்கு பிறகு கரூர் நகர இன்ஸ்பெக்டர் ஜி.மணிவண்ணன் 2-வது முறையாக ஆஜரானார். தவெக தலைவர்களிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்ஸ்பெக்டர் ஆஜரானதால் அவர்கள் தெரிவித்த புகார்கள் அடிப்படையில் விளக்கம் அளித்திருக்கலாம்; அது தொடர்பான ஆவணங்களை அளித்திருக்கலாம் எனத் தெரிகிறது. சுமார் அரை மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, கரூர் வெங்கமேட்டை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர் செந்தில், கோவை ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி நிர்வாகி ராகுல்காந்தி, நொய்யகலை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், நாமக்கல் மாவட்டம் ஒடுவந்தூரை சேர்ந்த தேமுதிக ஒன்றிய இணை செயலாளர் நவலடி ஆகியோர் ஆஜராகினர். செந்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்தார்.
நொய்யலை சேர்ந்த கோகுலகண்ணன், கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சார கூட்டம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு கரூரில் சனிக்கிழமை சம்பள நாள் என்பதால், தவெக பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என பதிவிட்டுள்ளார். இதனை ஆன்லைன், காட்சி ஊடகங்கள் வெளியிட்டிருந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டதால் ஆஜரானார்.