

சென்னை: வருமான வரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரைத் தேடி கரூர் போலீஸார் சென்னைக்கு வந்து சென்றுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அளித்த புகார்களின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதிகாரி மீது தாக்குதல் புகார்: அதன் அடிப்படையில், கடந்த 2023-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் சோதனை நடத்த வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தி காரை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கரூர் டவுன் காவல் நிலையத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் புகார் கொடுத்தனர். அதன்பேரில், அடையாளம் தெரியாத 50 நபர்கள் என்று குறிப்பிட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், நீண்ட நாட்களாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்த பிறகு, இந்த வழக்கில் கரூர் டவுன் போலீஸார் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அசோக் குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். பணியாளர்களிடம் விசாரணை அவரது செல்போன் டவர் லொக்கேஷன், சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் பகுதியை காண்பித்ததால், கரூர் மாவட்ட போலீஸார் நேற்று காலை அப்பகுதியில் உள்ள அசோக்குமாரின் வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், வீட்டுப் பணியாளர்களிடமும், அக்கம்பக்கத்திலும் விசாரித்துள்ளனர்.அசோக் குமாரின் பெயரில் இருக்கும் இன்னோவா கார், வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்ததை போலீஸார் ஆவணப்படுத்திச் சென்றுள்ள தாக கூறப்படுகிறது.