“1967-ல் இருந்தே காங்கிரஸாருக்கு குமுறல்கள் உண்டு!” - கார்த்தி சிதம்பரம் கவலை | நேர்காணல்
தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம். சில சமயங்களில் அது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளாத அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம், கூலிப்படை கலாசாரம் அதிகரித்து வருவதாகச் சொல்லும் நீங்கள், இதுகுறித்து தமிழக அரசிடம் வலியுறுத்தலாமே..?
கூலிப்படை ஆதிக்கமும், போதைப் பொருள் புழக்கமும் காவல்துறைக்கு தெரியாமல் இருக்க முடியாது. இவ்விஷயத்தில் அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கட்சி ரீதியாக அழுத்தம் கொடுப்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் தமிழக பொறுப்பாளர்களும் தான் முயற்சிக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைக்காக தமிழக காங்கிரஸ் எத்தனை போராட்டங்களை நடத்தி இருக்கிறது?
போராட்ட அரசியல் தேவையில்லாதது. நடுத்தர மக்கள் வாழும் தமிழகத்தில் போராட்டம் எடுபடாது. 10 பேர் கோஷமிட்டு, அதை படம்பிடித்து வெளியிடுவதை நான் விரும்புவதில்லை. பொதுவெளியில் கோரிக்கைகள் குறித்து விவாதித்தாலே போதும்.
முன்பு, அதிமுக அரசு அளவுக்கதிகமாக கடன் வாங்கியிருப்பதாக குற்றம்சாட்டிய திமுக, இப்போது உ.பி.யை விட இரண்டு மடங்கு கடன் வாங்கி இருப்பதாகச் சொல்கிறார்களே..?
ஒரே ஒரு குறியீட்டை வைத்து மட்டும் பொருளாதாரத்தை எடை போட முடியாது. ஜிடிபி, மாநில வருவாய், கல்வி வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவர்கள் எண்ணிக்கை, பெண்களுக்கான உரிமை போன்றவற்றை பார்த்தால் உ.பி.யை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றியதை தவிர, மற்றபடி மக்களுக்கு நன்மையளிக்கும் விஷயங்கள் புதிய திட்டத்தில் இருப்பதாக சொல்கிறார்களே?
அப்படி சொல்பவர்கள் திட்டத்தை படித்துப் பார்க்கவில்லை. திட்டத்தின் புதிய பெயரை அவர்களால் கூற முடியுமா? சங்க பரிவார் இயக்கங்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களை நினைத்தாலே அலர்ஜி, தாழ்வு மனப்பான்மை உள்ளது. ஏனென்றால், அவர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது இல்லை. அந்த காழ்ப்புணர்ச்சியில் தான் மகாத்மா காந்தியின் பெயரை நீக்குகின்றனர்; நேருவை குறை சொல்கின்றனர். இந்த ஆட்சி தொடர்ந்தால் ரூபாய் நோட்டில் இருக்கும் மகாத்மா காந்தி படத்தையும் நீக்கிவிடுவர்.
யார் தவறு செய்தாலும் தயங்காமல் விமர்சித்துவிடுவதும், நல்லது செய்தால் பாராட்டிவிடுவதுமாக இருக்கும் உங்களைப் போன்றோர் தலைமை ஏற்றால் தமிழக காங்கிரஸுக்கு புதுரத்தம் பாய்ச்சலாம் என்கிறார்களே..?
எனது சிந்தனைக்கு சரியென்று பட்டால் ஆழமாக பதிவு செய்வேன். இதுபோன்று பேசுபவர்கள் தமிழக தலைவர் பதவியில் இருந்தால் காங்கிரஸ் வளரும் என்று அகில இந்திய தலைமை முடிவு செய்தால் ஏற்றுக் கொள்வேன். ஆனால், தலைமை அதுபோல் சிந்தித்து முடிவெடுப்பது போல் எனக்குத் தெரியவில்லை.
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தமிழக காங்கிரஸார் இப்போது சத்தமாக பேச ஆரம்பித்திருக்கிறார்களே?
இவர்கள் இப்போது தான் பேசுகின்றனர். ஆனால், நான் ஏற்கெனவே இதுகுறித்து பேசிவிட்டேன். தேர்தலுக்கு முன் கூட்டணி வைப்பதும், வெற்றி பெற்றதும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளாத பழக்கமும் தான் இரு திராவிடக் கட்சிகளுக்கும் உள்ளது. அனைத்துக் கட்சிகளும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானது தான். பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளித்த ‘ஆந்திர மாடலை’ தமிழகமும் பின்பற்றலாம்.
உள்ளாட்சியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரதிநிதிகளை திமுக கண்டுகொள்வதில்லை என்ற குமுறல் உள்ளதே?
1967-ல் இருந்தே காங்கிரஸாருக்கு பல குமுறல்கள் இருந்து கொண்டு தான் உள்ளது. எங்கள் அமைப்பு வலுவாக இருந்தால் தான் அதற்கு தீர்வு வரும். தற்போது மாவட்ட ரீதியாக எங்கள் அமைப்பு வலுவாக இல்லை. அதை வலுப்படுத்த வேண்டும்.
மத்திய அரசை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் தனது அணுகுமுறையை இன்னும் மாற்றிக் கொள்ள வேண்டுமோ..?
நாங்கள் வலிமையாக எதிர்க்கிறோம். இந்தியாவிலேயே பாஜக-வை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி காங்கிரஸ் மட்டும் தான். இயக்க ரீதியாக 10, 12 மாநிலங்களில் வலுவாக இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் இல்லை. காங்கிரஸ் வலுவாக இல்லாத மாநிலமாக தமிழகமும் இருக்கிறது.
தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், காங்கிரஸை வளர்ப்பதற்கான எந்த முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லையே?
2014-க்குப் பிறகு நாங்கள் தனியாக நிற்கவில்லை. அதனால் எங்களது உண்மையான வாக்கு சதவீதத்தைக் கூற முடியவில்லை. 2024 தேர்தலில் கூட சமுதாய அமைப்புகளுடன் கூட்டணி வைத்து தான் பாஜக போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றது. அதை ஏற்க முடியாது. நாதக-வை தவிர எந்தக் கட்சியும் தனித்து போட்டியிடாததால் யாருக்கும் உண்மையான வாக்கு சதவீதத்தை கூற முடியாது. பாஜக-வை ஆதரிப்பவர்கள் மேல்தட்டு மக்கள் என்பதால் சமூகவலைதளங்கள் மூலம், அந்தக் கட்சி வளர்ந்து விட்டதாக பரப்புகின்றனர். ஆனால், பாஜக-வின் இந்தி, இந்துத்துவா கொள்கைகளை தமிழக மக்கள் ஏற்கவில்லை. வரும் தேர்தலிலும் அது தெரியும்.
என்ன செய்தால் தமிழகத்தில் காங்கிரஸ் வளரும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழகத்தில் காங்கிரஸ் உணர்வாளர்கள் அதிகளவில் உள்ளனர். சிறுபான்மையினர் நம்புகிற நல்ல கட்சி. சில கசப்பான மருந்தை தலைவர்கள் சாப்பிடத் தயாரானால் தான் காங்கிரஸை வளர்க்க முடியும். தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சி குறித்து அகில இந்திய தலைமையிடம் பேசி இருக்கிறேன். அவர்கள் தயாராக இருந்து, தமிழக தலைவர்களும் தயாராக இருந்தால் நிச்சயமாக காங்கிரஸ் வலுவான கட்சியாக மாறும்.
சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவுப் பாதையில் செல்வதாக குமுறியிருக்கிறாரே ஜோதிமணி எம்.பி?
இதுபற்றி நான் சொல்வதற்கு எதுவுமில்லை.
