“பாஜகவின் கிளைக் கழகம் தவெக என்பது பழனிசாமிக்கு தெரியவில்லை!” - வெளுத்து வாங்கும் திமுக எம்.பி வில்சன் | நேர்காணல்

“பாஜகவின் கிளைக் கழகம் தவெக என்பது பழனிசாமிக்கு தெரியவில்லை!” - வெளுத்து வாங்கும் திமுக எம்.பி வில்சன் | நேர்காணல்

Published on

நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைகளை காப்பதில் திமுக-வின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பவர் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் தமிழக அரசு எதிர்நோக்கும் சவால்களை திறம்பட எதிர்கொண்டு வெற்றிகளை தேடித்தரும் அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசியதிலிருந்து...

Q

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றுவது, இந்திய சட்டங்களின் பெயரை மாற்றுவது என மத்திய அரசு தன்போக்கில் செயல்படுவதாக நினைக்கிறீர்களா?

A

இந்திய திருநாடு ஆங்கிலேயர்களிடமிருந்து 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி அதிகாலையில் தான் விடுதலை அடைந்தது. அந்த சுதந்திரத்தை வாங்கித்தந்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை இந்த அரசு அதிகாலை வேளையிலேயே தட்டிப் பறித்திருக்கிறது.

நாட்டுக்குத் தேவை அடிப்படை கட்டமைப்புடன் கூடிய பொருளாதார வளர்ச்சி. வாயி்ல் நுழையாத இந்த புதுச்சட்டங்களால் அந்த வளர்ச்சியை கனவில்கூட எட்டிப்பிடிக்க முடியாது. லட்சக்கணக்கான கிராமப்புறப் பெண்கள், கூலித்தொழிலாளர்கள் பலனடைந்து வந்த ஓர் உன்னதமான திட்டத்தை மோடியும் எடப்பாடியும் சேர்ந்து பறித்துள்ளனர்.

Q

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை சட்டம்படித்த ஒரு நாடாளுமன்றவாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?

A

தமிழக ஆளுநர் தன்னை ஹீரோவாக நினைத்துக்கொண்டு திராவிட மாடல் அரசின் பல்வேறு செயல்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். ஆனால், அவர் எப்போதுமே ஜீரோ தான். ஒரு ஆளுநர் எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு அவர் சரியான உதாரணம்.

அதனால் தான் உச்ச நீதிமன்றத்தை அணுகி சட்ட ரீதியாக தமிழகத்தின் உரிமைகளை, அதிகாரத்தை ஜனநாயக ரீதியில் நிலை நாட்டி வருகிறோம். இந்த ஆளுநரால் தான் தமிழக அரசு பல மணி நேரத்தை வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் செலவிட்டுள்ளது.

Q

திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுவதாகச் சொல்லும் இபிஎஸ், திமுக-வை இன்ஜின் இல்லாத கார் என்றும் விமர்சிக்கிறாரே?

A

அரசியல் ஆத்திச்சூடி கூட தெரியாமல், புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிமுக-வை கடுமையாக சாடி வருகிறார். அதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாத பழனிசாமி, கூட்டணிக்கு விஜய் தன்னை கூப்பிடுவாரா என இலவு காத்த கிளியாக காத்திருக்கிறார்.

அப்படிப்பட்டவர், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்தியாவுக்கே முன்னோடியாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் திமுக-வை விமர்சிப்பது என்பது, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள யாராவது கிடைப்பார்களா என்ற அவரது ஏக்கத்தைத்தான் காட்டுகிறது. ஆனால், அவர் கையேந்தும் தவெக, பாஜக-வின் கிளைக்கழகம் என்பது அவருக்குத் தெரியாமல் போனது உண்மையில் வருத்தமானதே.

Q

மடியில் கனமில்லாத போது கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை தமிழக அரசு ஏன் எதிர்க்க வேண்டும்?

A

போலீஸாரின் எச்சரிக்கையை மீறி கூட்டப்பட்ட கூட்டமும், தவெக தலைவர் விஜய் நேரம் கடந்து வந்ததும் தான் அந்த விபத்துக்குக் காரணம் என்பதை உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறோம். மணிக் கணக்கில் காத்துக்கிடந்த மக்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லை. கூட்ட நெரிசலுக்குள்தான் நடிகர் விஜய்யின் கேரவன் நுழைந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆதவ் அர்ஜூனா போன்றவர்களே, நீதிமன்றத்தை அணுகியது தவறு என்பது தான் எங்களது நிலைப்பாடு. சம்பவ இடத்துக்கு தமிழக முதல்வரும், அமைச்சர்களும் உடனடியாக சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், அந்த சம்பவத்துக்குக் காரணமான விஜய் உள்ளிட்டோர் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

Q

திமுக-வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் தூற்றுகின்றனவே?

A

தமிழக அரசின் சாதனைத் திட்டங்களை பாஜக ஆளும் மாநிலங்கள் கூட காப்பியடித்து வருகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களின் மூலம் தமிழக மக்களின் வாழ்க்கைத் தரமும், பொருளாதாரமும் மேம்பட்டுள்ளது. இதனால் தான் தமிழகம் கல்வி, பொருளாதாரம், அந்நிய முதலீடுகளை பெறுதல் என அனைத்திலும் மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி ‘நம்பர் ஒன்’னாக இருக்கிறது.

Q

திமுக-வை கடுமையாக தாக்கும் விஜய்க்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து அஞ்சுகிறீர்களோ?

A

விஜய் பிரபலமான நடிகர். அவர் தமிழக அரசியல் களத்தை சினிமா ஷோ போல நினைத்துக் கொண்டிருக்கிறார். விஜய்க்கு கூடும் கூட்டம் ரசிகர்கள் கூட்டம். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், அது வெறும் சினிமா கவர்ச்சி மட்டுமே. ஏன்... நயன்தாராவோ, பவர் ஸ்டாரோ வந்தாலும் கூட்டம் கூடத்தான் செய்யும். அந்தக்கூட்டம் ஒருபோதும் வாக்குகளாக மாறாது. என்னைப் பொறுத்தமட்டில் நடிகர் விஜய் ஒரு மாய பிம்பம். அந்த மாய பிம்பத்தால் 75 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட பேரியக்கத்தை அசைத்துக்கூட பார்க்க முடியாது. தமிழக அரசியலில் எப்போதுமே மூன்றாவது நபருக்கு இடமில்லை.

Q

தேர்தல் நேரத்தில், தொடர் போராட்டங்களும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கி வருகிறதே?

A

இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளைச் சார்ந்த சிலரது தூண்டுதலின் பேரில் நடைபெறும் தேர்தல் நேர போராட்டங்களே. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள்கூட நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில், சுமார் 4 லட்சம் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். 99 சதவீத ஆசிரியர்களுக்கு யார் நல்லது செய்வார் என்பது தெரியும்.

அதுபோலத்தான் தூய்மைப் பணியாளர் களும். இப்போது இருப்பதைவிட பலமடங்கு கத்திக்குத்து, பாலியல் சம்பவங்கள், போதைக் கலாசாரம் போன்றவை கடந்த அதிமுக ஆட்சியில் நடந்துள்ளது. ஆனால், யார் தவறு செய்தாலும் அவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்தி விரைவாக தண்டனை பெற்றுத்தருவது தான் திராவிட மாடல் ஆட்சி. மாறாக அதிமுக ஆட்சி போன்று, “டிவியில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்” எனக்கூற இந்த ஆட்சியில் இடமில்லை.

“பாஜகவின் கிளைக் கழகம் தவெக என்பது பழனிசாமிக்கு தெரியவில்லை!” - வெளுத்து வாங்கும் திமுக எம்.பி வில்சன் | நேர்காணல்
“இப்போது அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு!” - சுதர்சன நாச்சியப்பன் சுளீர் பேட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in