

காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் போட்டியிடுவதால் அத்தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன.
இதில் 3 தொகுதிகளுக்கு 8 மாதங்களுக்கு முன்பே நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால், காரைக்குடி தொகுதிக்கு மட்டும் அமைதி காத்து வந்தனர்.
அப்போதே இத்தொகுதியில் சீமான் போட்டியிடுவார் எனப் பேசப்பட்டது. அது தற்போது திருச்சி மாநாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், காரைக்குடி நட்சத் திரத் தொகுதியாக மாறியுள்ளது.
சீமான் 2016-ல் கடலூர் தொகுதியிலும், 2021-ல் திருவொற் றியூரிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால், இந்த முறை எப்படியும் வெற்றி பெறவேண்டுமென முனைப்புக் காட்டி வருகிறார்.
இதற்காக, அவர் தனது சொந்த மாவட்டத்தைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறுகின்றனர். ஓராண்டுக்கு முன்பே, செய்தியாளர்கள் சந்திப்பின்போது சொந்த மண்ணில் போட்டி யிடுவேன் என்று சீமான் கூறியிருந்தார்.
அப்போதிலிருந்தே நாம் தமிழர் கட்சி யினர் காரைக்குடி தொகுதியில் தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி காரைக்குடியில் மாவீரர் தினப் பொதுக்கூட்டத்தைக்கூட பிரம்மாண்டமாக நடத்தினர்.
கடந்த தேர்தலில் காரைக்குடியில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் துரை மாணிக்கம் 23,872 வாக்குகள் (11.24 சதவீதம்) பெற்றார். இந்தத் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ், பாஜகதான் போட்டியிட்டன.
அதில் காங்கிரஸ் வெற்றிபெற்று மாங்குடி எம்எல்ஏவாக உள்ளார். இந்த முறையும் அவர் சீட் கேட்டு காய் நகர்த்தி வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் பாண்டித்துரையும், அமமுக சார்பில் மாவட்டச் செய லாளர் தேர்போகி பாண்டியும் சீட் கேட்டு வருகின்றனர்.
தவெகவில் மாவட்டச் செயலாளர் மருத்துவர் பிரபு போட்டியிடுவதற்காக கடந்த ஓராண்டாக அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். இந்த முறையும் திமுக, அதிமுக நேரடியாக களத்தில் இறங்காமல், கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.