மேகேதாட்டு விவகாரம்: தமிழக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம்; தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்

மேகேதாட்டு விவகாரம்: தமிழக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம்; தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்
Updated on
1 min read

ஓசூர்: மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் மறியலில் ஈடுபட உள்ளதால் தமிழகப் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் உடனடியாக அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தைக் கண்டித்தும் கன்னட அமைப்புகள் இன்று மதியம் மறியலில் ஈடுப்பட உள்ளன. இதன் காரணமாகத் தமிழக - கர்நாடக எல்லையில் இருமாநில போலீஸார் காலை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அறிவுறுத்தலின்படி, காலை முதல் கர்நாடக மாநிலத்திற்கு தமிழக பேருந்துகள் சென்று வந்த நிலையில் மதியம் 12 மணி முதல் பெங்களூரு செல்லும் அனைத்துத் தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூர் எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளன. கன்னட அமைப்பினர் போராட்டம் முடியும் வரையிலும் தமிழகப் பேருந்துகள் கர்நாடகாவிற்குள் செல்ல அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் தமிழக பதிவெண் கொண்ட கார் மற்று கனரக வாகனங்கள் வழக்கம்போல் சென்று வருகின்றன. பெங்களூரு செல்லும் பயணிகள் சிரமமின்றிப் பயணிக்க ஏதுவாக கர்நாடகப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி மற்றும் தமிழகப் பேருந்துகள் எல்லை தாண்டத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், கர்நாடக மாநில அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் வழக்கம்போல எல்லையைக் கடந்து இயங்கி வருகின்றன.

மேகேதாட்டு விவகாரம்: தமிழக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம்; தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்
“மேகமலை விவகாரத்தில் அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” - வைகோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in