

மேகேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து தமிழக எல்லையை நோக்கி காலி குடங்களுடன் பேரணியாக வந்த கன்னட அமைப்பினர்.
ஓசூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டன.
மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு மற்றும் அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், மேகேதாட்டுவில் கர்நாடக அரசு உடனே அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி, கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் சார்பில் கர்நாடகாவில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள அத்திப்பள்ளியில் நேற்று சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் நேற்று அதிகாலை 4 மணி முதல் ஓசூரில் நிறுத்தப்பட்டன. அதேநேரம், தமிழகப் பதிவெண் கொண்ட கார்கள், கனரக வாகனங்கள் மற்றும் கர்நாடக அரசு, தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன. இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் அந்தந்த மாநில போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நண்பகல் 12 மணி அளவில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் அத்திப்பள்ளியில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு தமிழக எல்லையை நோக்கி வந்தனர். அவர்களை கர்நாடக போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் மஞ்சுநாத் தேவா கூறியதாவது: பருவமழை போதிய அளவில் பெய்யாததால் காவிரியின் முக்கிய அணைகளில் நீர்மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியபோது, குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நாங்கள் ஒத்துழைப்பு அளித்தோம். அதேபோல, தற்போது பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்காக மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழகம் ஆதரவு அளிக்க வேண்டும்.
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ஆக.3-ம் தேதி தமிழக முதல்வர் விஜய்யை சந்திக்க உள்ளார். அப்போது, இரு மாநிலங்களுக்கும் ஏற்ற சுமுகமான முடிவை எடுக்க வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து பிடிவாதப் போக்கை கடைபிடித்தால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். மதியம் 1 மணிக்குப் பிறகு, ஓசூரில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக அரசுப் பேருந்துகள் வழக்கம்போல கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டன. பேருந்துகள் 8 மணி நேரமாக நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.