

சென்னை: 80,000 பேரிடம் கருத்துகளை பெற்று திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை காப்பியடிக்கப்பட்டதாக கூறுவது வேடிக்கையானது என தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அதிமுக தேர்தல் அறிக்கையை படிக்கக்கூட எங்களுக்கு நேரமில்லை. அதிமுகவின் தேர்தல் அறிக்கையை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. நிறைவேற்றக்கூடிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காலை உணவு திட்டம், வீடு தேடி மருத்துவம் போன்ற சொல்லப்படாத திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்றியிருக்கிறார்.
மீதமுள்ள 101 வாக்குறுதிகளில் 37 வாக்குறுதிகள் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பால் தான் நிறைவேற்ற முடியும் என்கிற காரணத்தால் அவை நிறைவேற்ற முடியாத சூழல் இருக்கிறது. மீது 64 திட்டங்கள் அப்பகுதியில் உள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்ற முடியவில்லை.
80,000 பேரிடம் கருத்துகளை பெற்று தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். ஒவ்வொரு துறையில் உள்ள நிபுணர்களின் ஆலோசனைப்படி இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதிமுகதான் திமுகவின் திட்டங்களை தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தாத வாக்குறுதிகளை பட்டியலிட்டால், அது நீண்டு கொண்டே போகும். அப்படியிருக்க திமுகவின் தேர்தல் அறிக்கை காப்பியடிக்கப்பட்டதாக கூறுவது வேடிக்கையானது.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றத்தை எப்ஐஆர் கூட பதிவிட முன்வராமல், குற்றவாளிகளை காப்பாற்ற அத்தனை முயற்சிகளை செய்தது அதிமுக. ஆனால், திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை முதல்வர் உறுதி செய்துள்ளார். ” என்று தெரிவித்தார்.