

தமிழகத்தில் கடந்த 2016 தேர்தலின்போது ஒரு குடும்பத்துக்கு ஒரு செல்போன் வழங்கப்படும் என்று அதிமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது? அதை நிறைவேற்றினார்களா என கனிமொழி கேள்வி எழுப்பினார்.
திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் சுப்பிரமணியன், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோரை ஆதரித்து கங்கைகொண்டான் மற்றும் பரப்பாடியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குடும்பத்துக்கு ஒரு செல்போன் வழங்கப்படும் என்று சொன்னார்கள். என்ன ஆனது? வாக்குறுதியை நிறைவேற்றினார்களா? இப்போது, திமுகவை பார்த்து பழனிசாமி, எங்கள் தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதாக தெரிவிக்கிறார்.
தற்போதைய தேர்தல் அறிக்கையை செயற்கை நுண்ணறிவு தளங்கள் மூலம் மக்களின் கருத்துகளை கேட்டுதான் தயார் செய்தோம். தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை பாஜக தருவதே இல்லை. சமீபத்தில் கொண்டுவரப்பட்ட எப்சிஆர்ஏ சட்டத் திருத்தம் மூலம், வெளிநாட்டு நிதி பெற்று இயங்கும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களை பாஜக மிரட்டுகிறது. அவர்களின் சொத்துக்களை பறிக்கப் பார்க்கிறார்கள்.
இந்தியில் திட்டங்களுக்கு பெயர் வைப்பதன் மூலம் கிராமப்புற மக்கள் அது என்ன திட்டமென்றே புரியாமல் உள்ளனர். ‘பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ என்றால் என்னவென்று புரிய இந்தி படிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குகிறார்கள். தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.3,600 கோடி கல்வி நிதியை இந்தி படிக்கவில்லை என்பதற்காக நிறுத்தி வைத்துள்ளது பாஜக அரசு. இவ்வாறு அவர் பேசினார்.