

மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து மாமண்டூர் பகுதியில் திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி.
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தமிழக முதல்வர் விஜய்யை ஸ்வீட் ப்ரோ என அழைத்ததோடு, தூயசக்தி தற்போது திருட்டு சக்தியாக மாறிவிட்டதாக விமர்சித்தார்.
மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக நேற்று மாமண்டூர் பகுதியில் அவர் பேசியதாவது: மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் யாரால் வந்தது என உங்களுக்கு தெரியும். தூயசக்தி, தூயசக்தி எனக்கூறிவிட்டு, திருட்டு சக்தியாக மாறியுள்ளது. வாக்களித்த மக்களை அவமானப்படுத்தும் வகையில் இடைத்தேர்தல் நடைபெறு வருகிறது. தீர்ந்து போன சக்தி எனக்கூறிவிட்டு அந்த இயக்கத்தை சேர்ந்தவரை தங்கள் கட்சிக்கு அழைத்து வந்து மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி வாக்கு கேட்கிறார்கள்.
முதல்வர் விஜய், திமுக தலைவரை மை டியர் ஸ்வீட் அங்கிள் என்று அழைப்பதுபோல், நானும் விஜய்யை தம்பி என அழைக்கப் போகிறேன். அதாவது, ப்ரோ, ஸ்வீட் ப்ரோ என அழைக்கின்றேன். தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ஸ்வீட் ப்ரோ, திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்ச்சித்து வருகிறார்.
மேலும், சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறை எடுக்கும் ஒரே முதல்வர் விஜய்தான். சோசியல் மீடியாவில் விமர்ச்சித்தால் வழக்கு பதிவு, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்கிறார்கள். பேரறிஞர் அண்ணா, கலைஞர் வளர்த்த இயக்கத்தில் இருந்து, யாரும் எங்கும் செல்லமாட்டார்கள். அதனால், உதயசூரியனுக்கு வாக்களித்தால் இங்கிருந்து யாரும் வெளியே செல்லமாட்டார்கள். மக்கள் நம்பி வாக்களிக்கலாம்.
மேலும், குழந்தைகள் தங்களின் வீட்டில் அடம்பிடித்து வாக்கு கேட்குமாறு பேசியவர்தான் இந்த முதல்வர். மேலும், மதுராந்தகம் தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு முதல்வர் வரும் வழியில், வண்டலூர் அருகே சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். ஆனால், தேர்வெழுத அச்சப்பட்டு பொய் கூறுவதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு பேசினார். இதேபோல், பெரும்பேர் கண்டிகை, கருங்குழி, மதுராந்தகம், கீழ் அத்திவாக்கம் கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளிலும் அவர் பிரச்சாரம் செய்தார்.