

தாராபுரம்: “எம்ஜிஆர், ஜெயலலிதா போல இப்போதும் தில்லாக திமுகவை எதிர்ப்பது இந்த விஜய் மட்டும்தான். இப்போது திமுகவுக்கும், அதிமுகவுக்கு ஓட்டு போடுவது ஒன்றுதான். அவர்கள் இரண்டு பேரும் ஒன்றுதான், வெளியில்தான் வேஷம், இரண்டு பேரும் கூட்டுதான். தவெக ஆட்சி அமையக் கூடாது என சதி செய்த திமுக, அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்” என தாராபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசினார்.
தாராபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவரும், முதல்வருமான விஜய், “தவெக ஆட்சியமைந்த குறுகிய காலத்திலே கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். நம் அரசு பதவியேற்ற நாள் முதல் ஊழல், லஞ்சம் அற்ற நிர்வாகத்தை முழு முனைப்போடு உறுதிப்படுத்தி வருகிறோம்.
பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிங்கப்பெண் அதிரடிப்படையை உருவாக்கினோம், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கியுள்ளோம்.
மேலும், காலை உணவுத் திட்டம் 6 முதல் 8 வகுப்பு வரை விரிவாக்கம், பயிர்க்கடன் தள்ளுபடி, நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை, பால் கொள்முதல் விலை உயர்வு, தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.
அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றிப் பயணத்திட்டம், பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள், மருத்துவக் காப்பீடுத்தொகை உயர்வு ஆகியவை அடுத்தடுத்து நடைமுறைக்கு வரவுள்ளது.
2026 தேர்தலில் மக்கள் தவெகவுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்துவிட்டார்கள், திமுகவை வீட்டு அனுப்பி விட்டார்கள் என்பதை மறந்து, இன்னமும் நாங்கள்தான் முதல்வர், இன்னமும் நம் குடும்பம்தான் அதிகாரத்தில் உள்ளது, அனைவரும் நம் குடும்பத்துக்கு கீழ்தான் அடிமையாக இருக்க வேண்டும் என்ற மன்னராட்சி மனப்பான்மையெல்லாம் நமக்கு கிடையாது.
மக்களிடம் செல், மக்களுடன் வாழ் என்ற அண்ணா சொன்னதையே நாம் கடைபிடிக்கிறோம். ஆனால், அண்ணாவையும், அவர் பெயரில் ஆரம்பித்த கட்சியையும் மறந்துவிட்டு மறைமுகமாக, பினாமியாக கூட்டு சேர்ந்து, சுயநலமாக சுத்துகிறவர்கள் போலவும் நாம் கிடையாது.
நாம் மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளோம். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயமாக காப்பாற்றுவோம். எம்மதமும் நம் மதம் என்றுதான் அரசியலுக்கு வந்துள்ளோம். கடவுள் நம்பிக்கை இருக்கு என்று சொல்லிதான் அரசியலுக்கு வந்துள்ளோம், யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல என்று சொல்லியே அரசியலுக்கு வந்துள்ளோம்.
மக்களின் நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம். அதனால்தான் நம் கொள்கை மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கை, நம் கூட்டணி மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி.
நாம் கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்லுவோம், கிருஸ்துமஸுக்கும், பக்ரீத்துக்கும் வாழ்த்து சொல்லுவோம். நமக்கு எல்லாருமே ஒன்றுதான், எல்லோருமே சமம்தான். மற்றவர்கள் போல வெளியில் வேஷம் போட்டு, வீட்டுக்குள் பதுங்கி பம்பி திமுக போல இருக்க மாட்டோம்.
அண்ணா காலத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஆட்களை தேர்தலில் நிறுத்தி, மன்னர்களையெல்லாம் தோற்கடித்தார் என திமுக பொதுச் செயலாளர் சொல்லியுள்ளார். அண்ணா காலத்திலும், எம்ஜிஆர் காலத்திலும் அப்படித்தான் நடந்தது. இப்போது நம் காலத்திலும் அப்படித்தான் நடந்துள்ளது. மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களை தேர்தலில் நிறுத்தி திமுகவின் மன்னரையும், குறுநில மன்னர்களையும் தவெக தோற்கடித்துள்ளது. இந்த உண்மையைதான் மேடையிலேயே திமுக தலைவர்களை வைத்துக்கொண்டு அவர் சொல்லியுள்ளார்.
திமுக தலைவர் என்னைப் பற்றி ஒருமையில் அவன், இவன் என பேசுகிறார். முன்பு நான் முதல்வராக இருந்த ஸ்டாலினை பாசமாக அங்கிள் என சொன்னபோது, எப்படி முதல்வரை இப்படி அழைக்கலாம் என்று கேள்வி கேட்டார்கள். இப்போது ஒருமையில் அவன், இவன் என்கிறார்கள். உங்களுக்கு பிடித்த கட்சிக்காரர்கள், ஏஜெண்டுகளை விட்டு, உங்கள் பரம்பரை சொத்தான ஆபாச நதி, வன்ம நதிகளை வைத்து என்னைப் பற்றி தரம் தாழ்ந்து பேசவிடுங்கள். நீங்கள் என்னைப் பற்றி தரம் தாழ்த்தி பேசப் பேச, மக்கள் நம் தரத்தை உயர்த்தி கொண்டுபோய் மேலே நிறுத்துவார்கள்.
மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லுவாராம், ஆனால் அதை மதிக்க மாட்டாராம். என்ன சதி செய்யலாம், கூட்டு சேரக்கூடாதவர்கள் கூட எல்லாம் கூட்டு சேரலாமா என திட்டம் போடுவாராம். பாஜகவின் ஒரு பிரிவாக இருந்த அதிமுக, இப்போது திமுகவின் ஒரு பிரிவாகவும் மாறிவிட்டது. திமுக சொல்வதையும், செய்வதையுமே அதிமுகவும் செய்கிறது. இவர்கள் இருவரும் ஒன்றுதான், இவர்கள் இருவருக்கும் ஒரே உரிமையாளர்தான். கடவுளும், மக்களும் நம்முடன் இருக்கும் போது நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காலமெல்லாம் எதிர்த்த தீயசக்தி திமுகவோடு கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்க திட்டம் தீட்டினால், அது அவர்களையே அவமானப்படுத்துவது போலத் தானே? அதனால்தான் இந்த தொகுதியில் வெற்றிபெற்ற சத்யபாமா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசியாக நம்மோடு வந்தார். அவர் எம்எல்ஏவாக இருந்து கட்சி தாவவில்லை, பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம்மோடு வந்தார்.
இதனை கழுதை, குதிரை பேரம் என சொல்கிறார்கள். மக்கள் ஆதரவு இருக்கும்போது நமக்கு ஏன் பேரம். இந்த அவதூறுகளை எல்லாம் திமுகவும், அதிமுகவும்தான் பரப்புகிறது. திமுகவுக்கு அதிமுக முட்டுக் கொடுக்கிறார்கள். சட்டப்பேரவையில் சர்க்காரியா கமிஷன் பற்றி நான் பேசும் போது, நீ ஏன் பேசுகிறாய் என அதிமுக கோபப்படுகிறது. இத்தனை வருடம் அதிமுக பேசியதை இப்போது நான் பேசினால், அந்தக் கட்சி கோபப்பட்டு முட்டுக்கொடுக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா போல இப்போதும் தில்லாக திமுகவை எதிர்ப்பது இந்த விஜய் மட்டும் தான். அது எம்ஜிஆர் தொண்டர்களுக்கு நன்றாக புரியும். குறுக்குவழியில் நம் ஆட்சியை கலைக்க திமுக, அதிமுக திட்டம் போடுகிறார்கள், அது நிறைவேறாது. எப்பாடு பட்டாலும் மக்களுக்கு நல்லது செய்வேன். தாராபுரம் மக்கள் எனக்கு ஒரு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா? எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த அதிமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா?
திமுகவை எதிர்த்த எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சாதி, மதம் பார்க்காமல் உண்மையாக, உணர்வாக கொங்கு பகுதி மக்கள் நின்றுள்ளார்கள். நீங்கள் எப்போதும் சத்தியத்தின் பக்கம் தான் நிற்பீர்கள், எனவே சத்யபாமாவை ஆதரிக்க வேண்டும். திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போடுவது ஒன்றுதான். அவர்கள் இரண்டு பேரும் ஒன்றுதான். வெளியில்தான் வேஷம், இரண்டு பேரும் கூட்டுதான். எனவே அவர்கள் சொல்லும் பொய்யை நம்பாதீர்கள். நம் ஆட்சி அமையக் கூடாது என சதி செய்த திமுக, அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
அன்று நடந்தது அம்மா ஆட்சி, அடுத்து நடந்தது அப்பா ஆட்சி, இப்போது நடப்பது நம் வீட்டு பிள்ளைகளின் ஆட்சி. இதுதான் உண்மையான மக்கள் ஆட்சி” என்றார்.