

தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மிகத் தலங்களில் குறிப்பிடத்தக்கதும், உலகப்புகழ் பெற்ற பட்டுத் தொழிலின் மையப்புள்ளியாகவும் விளங்குகிறது காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி, இது தொகுதி வரிசைப் பட்டியலில் 37-வதாக இடம்பெற்றுள்ளது.
காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என முக்கியக் கோயில்கள் உள்படப் பல்வேறு கோயில்கள் இருப்பதால், காஞ்சிபுரத்தை ‘ஆயிரம் கோயில்களின் நகரம்’ என்று குறிப்பிடுவர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் அண்ணா, 1957-ம் ஆண்டில் முதன் முதலாக தேர்தலை சந்தித்து சட்டப்பேரவைக்குள் நுழைந்த வரலாற்றுப் பெருமை கொண்டது இந்தத் தொகுதி.
இத்தொகுதி, ஆரம்ப காலத்தில் இருந்தே பெரும்பாலும் திமுக - அதிமுக ஆகிய இரு துருவங்களின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. கடந்த 15 தேர்தல்களில் திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
காங்கிரஸ், பாமக மற்றும் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி ஆகியவை தலா ஒருமுறை வென்றுள்ளன. கடந்த 2016, 2021 தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்ட சி.வி.எம்.பி.எழிலரசன் வெற்றி பெற்றார்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
இந்தத் தொகுதியில் பட்டு நெசவுத் தொழில் முதுகெலும்பாக உள்ளது. விவசாயிகள், நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அருகாமையில் உள்ள ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள், தொகுதியின் வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக உள்ளனர். வன்னியர்கள், பட்டியினத்தவர்கள், முதலியார் சமூகத்தினர் வாக்குகள் அதிகம் உள்ளன.
இவர்களே வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர். நெசவாளர்களுக்கு அரசு வழங்கும் மின்சாரச் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்கள் ஒருபுறம் கைகொடுத்தாலும், பட்டு நூல் விலை உயர்வு மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் இந்த தொழிலுக்குப் பெரும் சவாலாக உள்ளன.
அதேபோல், ஆன்மிகச் சுற்றுலாத் தலமான காஞ்சியில் குறுகலான சாலைகளும், பெருகிவரும் வாகன நெரிசலும் பொதுமக்களின் பொறுமையைப் பெரிதும் சோதிக்கின்றன. காஞ்சிபுரம் தொகுதியின் மிக நீண்டகாலப் பிரச்சினையாக இருப்பது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாடுகள்தான்.
புகழ்பெற்ற பல்வேறு கோயில்கள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. இதனால் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கள் வீடுகளைப் புதுப்பிக்கவும், கட்டுமானங்களை மேற்கொள்ளவும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.
நடுத்தர மக்களின் வாழ்வைப் பெரிதும் பாதிக்கும் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒரு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன.
வேட்பாளர்கள் பின்புலம்
இந்தத் தொகுதியில் திமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நித்யா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெற்றிச் செல்வியும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரஞ்சித்குமாரும் களமிறங்குகின்றனர். திமுக வேட்பாளர் நித்யா புதியவர். அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம் ஏற்கெனவே முன்னாள் அமைச்சராக இருந்தவர்.
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் இணைந்து எம்.ஜி.ஆர். அதிமுகவை உருவாக்கிய ரஞ்சித்குமார் அதில் இருந்து விலகி தவெக-வில் இணைந்து அந்தக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வெற்றிச் செல்வி மறைந்த தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் பேத்தி.
இந்தத் தொகுதியில் 4 முனைப் போட்டி இருந்தாலும் திமுக -அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. ரஞ்சித்குமார் பெரிய அளவில் வாக்குகளைப் பிரிப்பார் என்று கூறப்படுகிறது.
அதேபோல், வெற்றிச் செல்வியும் நம்பிக்கையுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். எனவே போட்டி பலமாக இருக்கும். இருப்பினும், கடைசி நேர பிரச்சார யுக்திகளே வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,33,825
பெண் - 1,42,437
மூன்றாம் பாலினத்தவர் - 37
மொத்த வாக்காளர்கள் - 2,76,299