ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜொலிக்கப் போவது யாரு? - ஒரு பார்வை

பொன்னி நதி எனப்படும் காவிரி ஆறு, வடகாவிரி என்றழைக்கப்படும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவில் மாலைபோல அமைந்துள்ள தீவுப் பகுதியில், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலும், பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண் டேஸ்வரி கோயிலும் நடுநாயகமாக அமைந்துள்ளன.

இந்தத் தொகுதியில் ஸ்ரீரங்கம் மற்றும் அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றியங்கள், சிறுகமணி பேரூராட்சி, மணப்பாறை ஒன்றியத்தில் 12 கிராமங்கள், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் ஒரு கிராமம் ஆகியவை அடங்கும்.

இங்கு பிரதான தொழிலாக விவசாயமே உள்ள நிலையில் நெல், வாழை, கரும்பு, மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்கும் வகையில் நவலூர் குட்டப்பட்டில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம், அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சேதுராப் பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி, தொழில் வளர்ச்சிக்கான அஸ்திவாரமாக மொண்டிப்பட்டி காகித ஆலை, மணப்பாறை கே.பெரியபட்டி சிப்காட் செயல்பட்டு வருகின்றன.

முத்தரையர்கள், பட்டியலினத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில் அடுத்த படியாக உடையார், பிராமணர்கள், நாயுடு உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்தத் தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்று முதல்வராகவும் பதவியேற்றார். இதன்மூலம் தமிழக முதல்வரை கொடுத்த தொகுதி என்ற சிறப்பும் ஸ்ரீரங்கத்துக்கு உண்டு.

இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிகபட்சமாக அதிமுக 9 முறையும், காங்கிரஸ் 4, திமுக 2, இந்திய கம்யூனிஸ்ட், ஜனதாதளம் தலா 1 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.பழனியாண்டி 1,13,904 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் 93,989 வாக்குகளும் பெற்றனர். 19,915 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பழனியாண்டி வெற்றி பெற்றார். இதன்மூலம் 2001 முதல் தொடர்ந்து 5 முறை அதிமுக வெற்றிபெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியை திமுக தட்டிப்பறித்தது.

தொகுதி பிரச்சினைகள்

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதியில் அடிமனை பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த வாழ்வாதார பிரச்சினையை தீர்ப்பவர்களுக்கே வாக்கு என்ற முடிவில் இருக்கின்றனர் இப்பகுதி மக்கள். நெல், வாழை போன்ற விளை பொருட்களுக்கு உரிய விலை இல்லை.

ஆண்டுதோறும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை. அதிகளவு மல்லிகை உள்ளிட்ட மலர்கள் விளைந்தும் உரிய விலை கிடைக்காமல் குப்பையில் கொட்டவேண்டியுள்ளது.

இதனால் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக நீடிக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஸ்ரீரங்கம் வடக்குவாசல்- நொச்சியம் இடையே தடுப்பணை உட்பட காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே கூடுதல் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்

தற்போதைய திமுக எம்எல்ஏ எம்.பழனியாண்டிக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஸ்ரீரங்கத்தில் திமுக சார்பில் எஸ்.துரைராஜ், அதிமுக சார்பில் ஆர்.மனோகரன், நாதக சார்பில் எம்.தர்மராஜ், தவெக சார்பில் ரமேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தொகுதியை தக்கவைக்கும் முனைப்பில் திமுக வேட்பாளரும், தட்டிப்பறிக்கும் நோக்கத்தில் அதிமுக வேட்பாளரும் வாக்குச்சேகரித்து வருகின்றனர். அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தவெக, நாதக வேட்பாளர்களும் களத்தில் சுழன்று வருகின்றனர். யாருக்கு வெற்றி என்பது மே 4-ல் தெரிந்துவிடும்.

இதுவரை வென்றவர்கள்

1951 - சிற்றம்பலம் - இந்திய கம்யூனிஸ்ட்

1957 - கே.வாசுதேவன் - காங்கிரஸ்

1962 - என்.சுப்ரமணிய செட்டியார் - காங்கிரஸ்

1967 - எஸ்.ராமலிங்கம் - காங்கிரஸ்

1971 - ஜோதி வெங்கடாச்சலம் ஸ்தாபன - காங்கிரஸ்

1977 - இரா.சவுந்தரராஜன் - அதிமுக

1980 - இரா.சவுந்தரராஜன் - அதிமுக

1989 - ஒய்.வெங்கடேச தீட்சிதர் - ஜனதா தளம்

1991 - கு.ப.கிருஷ்ணன் - அதிமுக

1996 - தி.ப.மாயவன் - திமுக

2001 - கே.கே.பாலசுப்பிரமணியன் - அதிமுக

2006 - மு.பரஞ்ஜோதி - அதிமுக

2011 - ஜெ.ஜெயலலிதா - அதிமுக

2015 - (இடைத்தேர்தல்) எஸ்.வளர்மதி - அதிமுக

2016 - எஸ்.வளர்மதி - அதிமுக

2021 - எம்.பழனியாண்டி - திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை

ஆண்கள் - 1,37,694

பெண்கள் - 1,46,120

திருநங்கைகள் - 48

மொத்தம் - 2,83,862

<div class="paragraphs"><p>எஸ்.துரைராஜ், ஆர்.மனோகரன், எம்.தர்மராஜ், ரமேஷ்</p></div>
சுந்தர்.சி என்ட்ரி... பிடிஆருக்கு டஃப்? - மதுரை மத்திய தொகுதி களம் எப்படி?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in