

சென்னை: முதல்வர் விஜய்யை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று சந்தித்துப் பேசினார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய்யின் இல்லத்துக்கு நேற்று வந்த கமல்ஹாசன், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, திரைத்துறை பாதுகாப்பு குறித்து இருவரும் விரிவாக விவாதித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது ‘எக்ஸ்' தளப் பதிவில்,“தமிழக முதல்வர் தம்பி விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். இந்தச் சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் தேவை என்பதை வலியுறுத்தி, 6 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்துள்ளேன். நன்மை மலரட்டும்!” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களது இல்லத்தில் கமல்ஹாசன் நேரில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.