

“சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் வென்றால் நான் வெற்றி பெற்றதாக அர்த்தம்” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதியை ஆதரித்து அவர் பேசியதாவது: தமிழகம் வெல்லவேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன். எனக்கு மக்கள் குணம் தெரியும். இதே ஆட்சி அமைய வேண்டும் என்பது நமது விருப்பம். முக்கியமாக என் விருப்பம்.
நாட்டில் நிலவும் அரசியல் சூழலில், உங்கள் வாக்கு தமிழகத்துக்கு மட்டுமானதல்ல. நாட்டுக்கானதும் தான். தமிழகமே, இப்போது தனிக் கோட்டையாக நின்று இந்தியாவுக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. அதில் முன்னணியில் நிற்கும் வீரர் துணை முதல்வர் உதயநிதி என்றால் மிகையாகாது. அவருடைய பேரைச் சொல்லும்போது குதூகலம் உருவாகிறது. நான் இதற்கு முன்னாடி இதே வீதிகளில் வந்திருக்கிறேன்.
அன்று பார்த்ததைவிட தற்போது சிறப்பாக இருக்கிறது. மேலும், இங்கே கூடியிருக்கும் மநீம தொண்டர்கள் ஆதாயத்துக்காக அல்ல. நாளை தமிழகம் சிறக்க வேண்டும் என்பதற்காகவே வந்துள்ளனர்.
சாதனை என்பது சொல்வதல்ல. பேசிக்கொண்டே இருப்பதல்ல. செய்துகாட்டுவதுதான். அந்த வகையில் சாதனையைச் செய்து காட்டிய இடத்துக்கு நான் இன்று வந்திருக்கிறேன். இனியும் இது சிறப்பாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
உலக அரங்கில் தமிழகத்தின் விளையாட்டு வீரர்கள் தெரிய ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம், உதயநிதி தான். அவர் மீண்டும் இந்த தொகுதியில் எம்எல்ஏ-வாக வரவேண்டும். அவரை வெல்ல வைப்பது என்னை வெற்றிபெற வைப்பது போலாகும். தமிழகம் ஜெயித்தால், நாம் எல்லோரும் ஜெயித்தது போல் தான். இவ்வாறு அவர் பேசினார்.