

சென்னை: சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு சம்பவத்தில் மனசாட்சியே இல்லாமல் பேசிய ஆட்சியாளர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: சாத்தான் குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறியும்போது நெஞ்சம் பதைக்கிறது. நாட்டையே அதிரச் செய்த இந்த அநீதிக்கு எதிராக,விடாமல் போராடிய ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தார், சாத்தான்குளம் மக்கள், சமூக ஆர்வலர்கள், சிபிஐ அதிகாரிகள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் இழைத்த வர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்படவேண்டும் என்பது என் நிலைப்பாடு. தூக்குத் தண்டனை விதிக் கப்பட்ட 9 பேரின் குடும்பங்களை எண்ணிப் பார்க்கிறேன். மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்கள் குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள்?
போலீஸாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்களைப் பார்க்காமலே சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், இருவரும் மூச்சுத்திணறலால் இறந்தார்கள் என மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது. அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.